அமெரிக்காவில் ஜனநாயக கட்சி வேட்பாளர் தேர்தல்: தெற்கு கரோலினாவில் ஜோ பிடென் அமோக வெற்றி


அமெரிக்காவில் ஜனநாயக கட்சி வேட்பாளர் தேர்தல்: தெற்கு கரோலினாவில் ஜோ பிடென் அமோக வெற்றி
x
தினத்தந்தி 2 March 2020 4:42 AM IST (Updated: 2 March 2020 4:42 AM IST)
t-max-icont-min-icon

அமெரிக்காவில் ஜனநாயக கட்சி வேட்பாளர் தேர்தலில், தெற்கு கரோலினாவில் ஜோ பிடென் அமோக வெற்றிபெற்றார்.

வா‌ஷிங்டன்,

அமெரிக்க நாட்டில் வரும் நவம்பர் 3-ந் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்க உள்ளது.

இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடுவதற்கு பலத்த போட்டி நிலவுகிறது. அந்தக் கட்சியின் வேட்பாளரை தேர்வு செய்வதற்காக மாகாணங்களில் கட்சி தேர்தல் நடந்து வருகிறது. இவற்றில் கணிசமான வெற்றியை பெறுகிறவர்தான் வேட்பாளர் ஆக முடியும்.

இந்த நிலையில் அங்கு தெற்கு கரோலினா மாகாணத்தில் நடந்த தேர்தலில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடென் அமோக வெற்றி பெற்றார். இவர் 48.4 சதவீத ஓட்டுக்களைப்பெற்றார். மற்றொரு முக்கிய வேட்பாளரான பெர்னீ சாண்டர்ஸ் 19.9 சதவீத ஓட்டுக்களை மட்டுமே பெற முடிந்தது.

ஏற்கனவே நடந்த அயோவா, நியூஹாம்ப்‌‌ஷயர், நெவேடா ஆகிய 3 மாகாண தேர்தலில் தோல்வியைத் தழுவி இருந்த நிலையில், பெரிய மாகாணமான தெற்கு கரோலினாவில் இப்போது கிடைத்துள்ள வெற்றி ஜோ பிடெனுக்கு புதிய நம்பிக்கையை அளிப்பதாக அமைந்துள்ளது. இதுதான் அவருடைய முதல் வெற்றியும் ஆகும். இவருக்கு ஆப்பிரிக்க அமெரிக்க மக்களிடையே பலத்த செல்வாக்கு உள்ளது.

அமெரிக்காவில் நாளை (செவ்வாய்க்கிழமை) அதிக மக்கள் தொகையை கொண்ட கலிபோர்னியா, டெக்சாஸ் மாகாணங்கள் உள்பட 14 மாகாணங்களில் ஜனநாயக கட்சி தேர்தல் நடக்கிறது. ‘சூப்பர் டியூஸ்டே’ என்று அழைக்கப்படுகிற இந்த நாளில் நடக்கிற தேர்தலில் பெரும்பான்மையான மாகாணங்களில் வெற்றி பெறுகிறவர், டிரம்புக்கு எதிராக களம் இறங்க பிரகாசமான வாய்ப்பு உள்ளது.

Next Story