இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 3 ஆக உயர்வு
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 3 ஆக உயர்வடைந்து உள்ளது.
புதுடெல்லி,
சீனாவில் கடந்த வருடம் டிசம்பர் மாத இறுதியில் ஹுபெய் மாகாண தலைநகர் உகானில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. உகானில் அதிக பாதிப்பு ஏற்பட்டு உள்ளதுடன் தொடர்ந்து உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. சீனா மட்டுமின்றி உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலி எண்ணிக்கை இன்று 2,912 ஆக உயர்ந்து உள்ளது...
சீனாவிலுள்ள உகான் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படித்து வரும் கேரள மாணவி ஒருவரை கடந்த ஜனவரி 29ந்தேதி இந்த வைரஸ் தாக்கியது. சீனாவில் இருந்து நாடு திரும்பிய அவர் திருச்சூரில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
இதேபோன்று உகான் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படித்து வரும் மற்றொரு மாணவருக்கும் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. அவர் கேரளாவில் உள்ள ஆலப்புழா அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து, கேரளாவில் 3வது நபருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. காசர்கோடு பகுதியை சேர்ந்த அவர் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டார். தொடர்ந்து 3 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்ட உடன் கேரள அரசு அதனை ‘மாநில பேரிடர்’ என அறிவித்தது.
தீவிர சிகிச்சைக்கு பின்னர் 3 பேருக்கும் பாதிப்பு குறைந்தது. சிகிச்சை முடிந்து அவர்கள் வீடு திரும்பினர். கேரள அரசும் ‘மாநில பேரிடர்’ அறிவிப்பினை தளர்த்தியது.
இந்நிலையில், இந்தியாவில் 2 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இதுபற்றி மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், இத்தாலியில் இருந்து டெல்லி வந்த ஒருவருக்கும், துபாயில் இருந்து தெலுங்கானா வந்த ஒருவருக்கும் என 2 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது என தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இத்தாலியில் இருந்து ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகருக்கு வந்து சேர்ந்த நபருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது. இதுபற்றி ராஜஸ்தான் சுகாதார மந்திரி ரகுசர்மா கூறும்பொழுது, கடந்த 29ந்தேதி ஜெய்ப்பூர் வந்திறங்கிய பயணியிடம் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் முதலில் பாதிப்பு இல்லை என தெரிந்தது.
2வது முறையாக நடந்த பரிசோதனையில் அவருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது என கூறினார். இதனால் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 3 ஆக உயர்வடைந்து உள்ளது.
Related Tags :
Next Story