டெல்லி, தெலுங்கானாவை சேர்ந்த இருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு - ஆஸ்பத்திரிகளில் தீவிர சிகிச்சை


டெல்லி, தெலுங்கானாவை சேர்ந்த இருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு - ஆஸ்பத்திரிகளில் தீவிர சிகிச்சை
x
தினத்தந்தி 3 March 2020 4:00 AM IST (Updated: 3 March 2020 3:27 AM IST)
t-max-icont-min-icon

டெல்லி, தெலுங்கானாவை சேர்ந்த இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவர்கள் இருவருக்கும் ஆஸ்பத்திரிகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

புதுடெல்லி,

சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ் அந்த நாடு முழுவதும் வேகமாக பரவி வருவதுடன், சுமார் 3 ஆயிரம் பேரின் உயிரையும் குடித்திருக்கிறது. இவ்வாறு சீனாவை மிரட்டி வரும் இந்த வைரஸ் தற்போது உலகின் பல்வேறு நாடுகளிலும் ஜெட் வேகத்தில் பரவி வருகிறது.

அந்த வகையில் ஈரான், தென்கொரியா, இத்தாலி, ஜப்பான் என 50-க்கும் மேற்பட்ட நாடுகளும் கொரோனாவின் கோர கரங்களில் சிக்கி இருக்கின்றன. இதில் ஈரான், தென்கொரியா உள்ளிட்ட நாடுகளில் அதிகமான உயிர்ப்பலியும் நிகழ்ந்து உள்ளது.

சீனாவில் வைரசின் பிறப்பிடமாக கருதப்படும் உகான் நகரில் இருந்து தாயகம் திரும்பிய கேரளவாசிகள் 3 பேர் உள்பட இந்தியர்கள் சிலருக்கு ஏற்கனவே கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது. இவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வீடு திரும்பி இருந்தனர்.

இவர்களை தவிர பல்வேறு வெளிநாடுகளில் இருந்து திரும்பிய இந்தியர்கள் சுமார் 37 பேர் நோய் அறிகுறிகளுடன் ஆங்காங்கே மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர். இதைப்போல வெளிநாடுகளில் இருந்து அழைத்து வரப்பட்ட 25,738 பேர் தொடர்ந்து கண்காணிப்பு மையங்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில் இத்தாலிக்கு சென்று திரும்பிய டெல்லியை சேர்ந்த ஒருவருக்கு நோய் அறிகுறிகள் இருந்ததால் டெல்லி ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் வைரஸ் பரிசோதனை மேற்கொண்டார். இதில் அவருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதைப்போல சமீபத்தில் துபாய் சென்று வந்த தெலுங்கானாவாசி ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இவர்கள் இருவரும் ஆஸ்பத்திரிகளில் தனி வார்டில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த தகவல்களை தெரிவித்த மத்திய சுகாதார மந்திரி ஹர்சவர்தன், நாடு முழுவதும் 3,217 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில், 5 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறியுள்ளார். இத்தாலி, ஈரான் நாடுகளில் வசித்து வரும் இந்தியர்களை மீட்டு வருவது குறித்து அந்தந்த நாட்டு அதிகாரிகளுடன் மத்திய அரசு ஆலோசித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதற்கிடையே மராட்டியத்தின் சந்திராபூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவர் ஒருவர் இத்தாலியில் இருந்து கடந்த மாதம் 26-ந் தேதி நாடு திரும்பினார். இங்கு வந்ததும் அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால், அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 29-ந் தேதி அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் அவர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகவில்லை என்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக ஆஸ்பத்திரி நிர்வாகம் தெரிவித்தது.


Next Story