இந்தியாவை முன்னோக்கி கொண்டு செல்ல அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் - ராகுல்காந்தி வேண்டுகோள்

இந்தியாவை முன்னோக்கி கொண்டு செல்ல அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் என ராகுல்காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதுடெல்லி,
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக டெல்லி ஷாகீன்பாக்கில் 2 மாதங்களுக்கும் மேலாக போராட்டம் நடந்து வந்த நிலையில், வடகிழக்கு டெல்லியின் ஜாப்ராபாத், மாஜ்பூர் உள்ளிட்ட பகுதிகளிலும் போராட்டங்கள் நடந்தன. இந்த போராட்டத்துக்கு எதிராக, மற்றொரு பிரிவினரும் கடந்த 23ந்தேதி போராட்டம் நடத்த முயன்றனர்.
இதில் இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. இரு பிரிவினரும் ஒருவரையொருவர் கற்களை வீசி தாக்கிக்கொண்டனர். அப்போது போலீசார் தலையிட்டு கண்ணீர் புகை குண்டுகளை வீசி மோதலை கட்டுப்படுத்தினர். ஆனால் இந்த மோதல் மறுநாளில் மிகப்பெரும் வன்முறையாக வெடித்தது.
ஜாப்ராபாத், மாஜ்பூர், சந்த்பாக், குரேஜிகாஸ், பஜன்புரா, யமுனா விகார் என வடகிழக்கு டெல்லி முழுவதும் வன்முறை பரவியது. சில இடங்களில் துப்பாக்கிச்சூடும் நடந்தது. இதில் ஏராளமானோர் படுகாயமடைந்தனர்.
இந்த வன்முறையில் ஒரு போலீஸ் கான்ஸ்டபிள், ஒரு உளவுப்பிரிவு அதிகாரி உட்பட 49 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டார்.
டெல்லியில் வன்முறை நடந்த இடங்களை பார்வையிட்ட பின் ராகுல்காந்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
டெல்லியின் எதிர்காலமான பள்ளிகளை வெறுப்பும், வன்முறையும் அழித்துவிட்டன. வன்முறைகளால் பாரத மாதாவுக்கு எந்தவிதப்பயனும்
ஏற்படப்போவதில்லை. இந்தியாவை முன்னோக்கி கொண்டு செல்ல அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story