வருகிற 27-ந்தேதி வங்கிகள் இணைப்பை எதிர்த்து வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்


வருகிற 27-ந்தேதி வங்கிகள் இணைப்பை எதிர்த்து வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்
x
தினத்தந்தி 6 March 2020 5:31 AM IST (Updated: 6 March 2020 5:31 AM IST)
t-max-icont-min-icon

வங்கிகள் இணைப்பை எதிர்த்து வங்கி ஊழியர்கள் 27-ந்தேதி நாடுதழுவிய வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

ஐதராபாத், 

10 பொதுத்துறை வங்கிகள் 4 ஆக ஒருங்கிணைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ், யுனைடெட் பேங்க் ஆப் இந்தியா ஆகியவை பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் இணைகின்றன. சிண்டிகேட் வங்கி, கனரா வங்கியுடன் இணைகிறது. ஆந்திரா வங்கி, கார்ப்பரேஷன் வங்கி ஆகியவை யூனியன் பேங்க் ஆப் இந்தியாவுடன் இணைகின்றன. அலகாபாத் வங்கி, இந்தியன் வங்கியுடன் இணைகிறது.

இந்த இணைப்பு, ஏப்ரல் 1-ந்தேதி அமலுக்கு வருகிறது.

இந்நிலையில், வங்கிகள் இணைப்பை எதிர்த்து நாடுதழுவிய வேலைநிறுத்தத்துக்கு அகில இந்திய வங்கி பணியாளர்கள் சங்கம், அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம் ஆகியவை கூட்டாக அழைப்பு விடுத்துள்ளன.

இதுகுறித்து அகில இந்திய வங்கி பணியாளர்கள் சங்க பொதுச்செயலாளர் சி.எச்.வெங்கடாசலம் கூறியதாவது:-

தற்போது நடந்து வரும் வங்கி சீர்திருத்தங்களை நாங்கள் எதிர்க்கிறோம். பொதுத்துறை வங்கிகளுக்கு எதிரான இத்தகைய கொள்கைகளை கண்டித்து பல போராட்டங்களை நடத்தி விட்டோம். இருந்தாலும், அடுத்தடுத்து வந்த அரசுகள், வங்கிகளை தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் கொள்கையை 30 ஆண்டுகளாக பின்பற்றி வருகின்றன.

தற்போதும் ஆயிரக்கணக்கான கிராமங்களில் வங்கிகள் இல்லை. எனவே, வங்கிகளை விரிவுபடுத்துவதுதான் இப்போதைய தேவை. அதை விட்டுவிட்டு வங்கிகளை இணைக்கக்கூடாது. 10 வங்கிகள் இணைப்பு என்றால், 6 வங்கிகள் மூடப்பட்டு விடும் என்றுதான் அர்த்தம். தேசத்தின் பொருளாதாரத்துக்கு பாடுபட்ட இந்த வங்கிகளை மூடுவது சரியல்ல.

பல்வேறு கட்சிகளும், மாநில அரசுகளும் எதிர்ப்பு தெரிவித்த பிறகும் மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. பொருளாதார மந்தநிலை நிலவும் நேரத்தில், இந்த வங்கிகள், பொருளாதாரத்துக்கு புத்துயிரூட்ட உதவும். வங்கிகள் இணைப்பால், வாராக்கடன் உயரும்.

ஆகவே, வங்கிகள் இணைப்பை கைவிடக்கோரியும், ஐ.டி.பி.ஐ. வங்கி தனியார்மயமாக்கத்தை நிறுத்தக்கோரியும், வாராக்கடன்களை வசூலிக்கக்கோரியும் 27-ந்தேதி நாடுதழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம். இதற்கான நோட்டீசு, 6-ந்தேதி (இன்று) கொடுக்கப்படும்.

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி, வருகிற 12-ந்தேதி ஆர்ப்பாட்டமும், 20-ந்தேதி தர்ணாவும் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story