ஈரானில் உள்ள 300 இந்தியர்கள் இன்று மஹான் ஏர் விமானம் மூலம் நாடு திரும்புகின்றனர்
ஈரானில் உள்ள 300 இந்தியர்கள் இன்று மஹான் ஏர் விமானம் மூலம் நாடு திரும்புகின்றனர் என விமானப் போக்குவரத்து மந்திரி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலக நாடுகளுக்கு வேகமாக பரவி வருகிறது. ஈரான் நாட்டில் இதுவரை 108 பேரை பலி வாங்கி உள்ளது. ஏராளமானோர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வருகிறார்கள். வியாழக்கிழமை மட்டும் 591 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
ஈரானின் வெளியுறவு அமைச்சரின் ஆலோசகர் கொரோனா வைரஸ் பாதிப்பால் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஈரானில் மார்ச் 19ம் தேதி வரை அனைத்து பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மூடப்படும் என நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் சயீத் நமகி அறிவித்துள்ளார்.
ஈரான் நாட்டில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் தங்கி உள்ளனர். இவர்களில் பலர் அங்குள்ள மீன்பிடி துறைமுகங்களில் தங்கி மீன்பிடி தொழில் செய்து வருகிறார்கள். தமிழகம் மற்றும் கேரளாவில் இருந்து மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உள்ளனர். அவர்களில் 562 பேர் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.
ஈரானில் கொரோனா வைரஸ் பரவல் பற்றிய தகவல் அறிந்ததும் தமிழக மீனவர்கள் சொந்த ஊர் திரும்ப முயன்றனர். விமான சேவைகள் நிறுத்தப்பட்டதால் அவர்களால் நாடு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது.
ஈரான் துறைமுகங்களில் தங்கி இருக்கும் குமரி மீனவர்கள் சிலர் தங்களின் நிலையை வீடியோவில் பதிவு செய்து அதனை வாட்ஸ்-அப் மூலம் உறவினர்களுக்கு அனுப்பினர்.
அந்த வீடியோவில், கொரோனா வைரசுக்கு பயந்து படகுகளில் பதுங்கி கிடக்கிறோம். இங்கு எந்த மருத்துவ வசதியும் இல்லை. முககவசம் வாங்க கூட வழியில்லை. இன்னும் சில நாட்கள் இருந்தால் எங்களுக்கு உணவும், குடிநீரும் கிடைக்காது. இங்கேயே சாகும் முன்பு எங்களை எப்படியாவது மீட்டுச் செல்லுங்கள் என்று வீடியோவில் உருக்கமாக கூறி இருந்தனர்.
மீனவர்களின் கதறல் சமூக ஊடகங்களில் பரவியதை தொடர்ந்து பல்வேறு மீனவ அமைப்புகள் மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை மனுக்கள் அனுப்பினர். மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரிடமும் மனு கொடுத்தனர்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் மத்திய அரசுக்கு அவசர கடிதம் எழுதினார். ஈரானில் தவிக்கும் மீனவர்களை விரைவில் மீட்டு வரவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.
தமிழக அரசு மற்றும் மீனவ அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு, ஈரானில் தவிக்கும் மீனவர்களை மீட்டு வரும் நடவடிக்கைகளில் இறங்கியது. இது தொடர்பாக ஈரானில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் ஈரானின் 8 துறைமுகங்களில் தங்கி இருக்கும் மீனவர்களை சந்தித்து பேசினர்.
அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தவும், ஏற்பாடு செய்தனர். நேற்று பரிசோதனைகள் நடந்ததாக தெரிகிறது.
சிவில் விமானப் போக்குவரத்து மந்திரி ஹர்தீப் பூரி கூறியதாவது
கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிக அளவில் காணப்படுகின்ற நாடுகளில் ஈரானும் ஒன்றாக இருப்பதால், அங்கு சிக்கித் தவிக்கும் இந்தியர்களைத் திரும்ப அழைத்து வரவும் ஈரானிய நாட்டினரை அங்கு திருப்பி அனுப்பிவைக்கவும் இந்திய அரசு ஈரானிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
ஈரானில் இருந்து முதல் விமானம் புறப்பட்டு மார்ச் 6 ஆம் தேதி மாலை இந்தியாவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதில் வரும் சுமார் 300 இந்தியர்களை சோதனைக்கு உட்படுத்தபடுவார்கள்.அதன் பின் அவர்கள் சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கப்படுவர்.
கொரோனா பாதிப்பு இல்லாத பயணிகள் மட்டுமே ஈரானில் இருந்து திரும்ப அழைத்து வரப்படுவார்கள். இந்திய மருத்துவ நிபுணர்களின் குழு ஏற்கனவே ஈரானில் தரையிறங்கி, சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீண்டும் இந்தியாவுக்கு கொண்டுவரும் முன் சோதனை நடத்த அங்கு ஒரு முகாமை அமைத்துள்ளது.
இந்தியா இப்போது ஒரு நாளைக்கு 70,000 வெளிநாட்டு பயணிகளை சோதனையிடும் திறனைக் கொண்டுள்ளது.
ஈரானின் மஹான் ஏர்வே டெல்லிக்கு விமானத்தை இயக்குகிறது. மற்றும் திரும்பும் விமானத்தில் இங்குள்ள ஈரானியர்கள் அங்கு கொண்டு செல்லப்படுவர் என கூறினார்.
ஈரானில் சுமார் 2,000 இந்தியர்கள் உள்ளனர். அதுபோல் ஈரானுக்கு மீண்டும் பறக்க வேண்டிய 2,000 ஈரானியர்கள் இங்கு உள்ளனர் என சிவில் ஏவியேஷன் இயக்குநரக தலைவர் அருண்குமார் கூறினார்.
கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக இந்தியா இந்த விமானங்களை நிறுத்திய பிப்ரவரி 25 வரை ஈரான் ஏர் மற்றும் மஹான் ஏர் டெல்லி மற்றும் மும்பைக்கு பறந்து கொண்டிருந்தன. ஆனால் எந்த இந்திய விமான நிறுவனமும் ஈரானுக்கு பறக்கவில்லை என்று விமான போக்குவரத்து செயலாளர் பி எஸ் கரோலா தெரிவித்தார்.
Related Tags :
Next Story