பாரத் பெட்ரோலிய நிறுவன பங்குகள் விற்பனை தொடர்பாக மத்திய அரசுக்கு காங்கிரஸ் கேள்வி


பாரத் பெட்ரோலிய நிறுவன பங்குகள் விற்பனை தொடர்பாக மத்திய அரசுக்கு காங்கிரஸ் கேள்வி
x
தினத்தந்தி 8 March 2020 10:26 PM IST (Updated: 8 March 2020 10:26 PM IST)
t-max-icont-min-icon

பாரத் பெட்ரோலிய நிறுவன பங்குகள் விற்பனை செய்ய உள்ளது தொடர்பாக மத்திய அரசுக்கு காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பி உள்ளது.

புதுடெல்லி,

மத்திய அரசு நிறுவனங்களில் ஒன்று, பாரத் பெட்ரோலிய நிறுவனம். இந்த நிறுவனம் லாபத்தில் இயங்கி வருகிற நிறுவனம் ஆகும். கடந்த டிசம்பர் மாதத்துடன் முடிந்த காலாண்டில் இந்த நிறுவனம், நிகர லாபமாக ரூ.2,051.43 கோடி ஈட்டியது. முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் இந்த லாபம் 3 மடங்கு ஆகும். ஆனால் இந்த நிறுவனத்தில் தனக்கு உரிய 52.98 சதவீத பங்குகளையும் விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது.

இதற்கான ஒப்புதலை மத்திய மந்திரிசபை கடந்த நவம்பர் மாதமே அளித்துவிட்டது. அதே நேரத்தில் இந்த நிறுவனத்தின் கீழான நுமலிகார் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம் (அசாம்) மட்டும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும். இப்போது பாரத் பெட்ரோலிய கழகத்தின் 52.98 சதவீத பங்குகளை வாங்குவதற்கு விருப்பத்தை வெளிப்படுத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த பங்குகளை வாங்க விரும்புவோருக்கு 10 பில்லியன் டாலர் (சுமார் ரூ.73 ஆயிரம் கோடி) சொத்துகள் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாரத் பெட்ரோலிய நிறுவன பங்குகள் விற்பனை செய்ய உள்ளது தொடர்பாக, மத்திய அரசுக்கு காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பி உள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுா்ஜேவாலா தனது டுவிட்டரில், “ கடந்த டிசம்பர் மாதத்தில் பிபிசிஎல் மூலம் அரசுக்கு ரூ.2051.53 கோடி லாபம் கிடைத்துள்ளது. இந்த அளவிற்கு லாபகரமாக இயங்கும் நிறுவனத்தை அரசு விற்க வேண்டிய கட்டாயம் என்ன வந்தது. தனது நண்பா்களான பெரு நிறுவன அதிபா்களுக்கு அளித்த வாக்குறுதியின் அடிப்படையில்தான் பிரதமா் மோடி இதுபோன்ற முடிவுகளை எடுக்கிறாரா? என்ற கேள்வி எழுகிறது” என்று பதிவிட்டுள்ளார்.


Next Story