‘என்னிடமே பிறப்பு சான்றிதழ் இல்லை’ - மத்திய அரசுக்கு எதிராக சந்திரசேகரராவ் ஆவேசம்


‘என்னிடமே பிறப்பு சான்றிதழ் இல்லை’ - மத்திய அரசுக்கு எதிராக சந்திரசேகரராவ் ஆவேசம்
x
தினத்தந்தி 8 March 2020 10:00 PM GMT (Updated: 2020-03-09T02:33:07+05:30)

என்னிடமே பிறப்பு சான்றிதழ் இல்லை, ஏழைகள் எப்படி வழங்குவார்கள் என்று மத்திய அரசுக்கு எதிராக சந்திரசேகரராவ் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

ஐதராபாத்,

தெலுங்கானா மாநிலத்தில் சட்டசபை கூட்டம் நடந்து வருகிறது. நேற்று குடியுரிமை திருத்த சட்டம்(சி.ஏ.ஏ.) மற்றும் மக்கள் தொகை பதிவேடு(என்.பி.ஆர்) குறித்து நடந்த விவாதத்தில் முதல்-மந்திரி சந்திர சேகரராவ் பேசியதாவது:-

குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக அனைத்து மாநிலங்களும் வலிமையாக எழுந்து நிற்க வேண்டும். என்னிடம் கூட பிறப்பு சான்றிதழ் கிடையாது. நான் எப்படி எனது தந்தையின் பிறந்த இடம், பிறந்த தேதியை நிரூபிக்க முடியும்?

நான் பிறந்தபோது என்னுடைய சிறிய கிராமத்தில் ஆஸ்பத்திரிகள் கிடையாது. அங்குள்ள பெரியவர்கள் ‘ஜவநாமா’ என்ற பிறப்பு குறித்து எழுதி கொடுப்பார்கள். அதற்கு அரசின் அதிகாரபூர்வ முத்திரை இருக்காது. நான் பிறந்தபோது எனது குடும்பத்தில் 580 ஏக்கர் நிலம் இருந்தது. ஆனாலும் என்னால் பிறப்பு சான்றிதழை தர முடியவில்லை.

அப்படி இருக்கும்போது ஏழை மக்கள் பழங்குடியினர் எப்படி பிறப்பு சான்றிதழை வழங்க முடியும்? குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தெலுங்கானா சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றுவோம். இதேபோல் அனைத்து மாநிலங்களும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று அவர் பேசினார்.


Next Story