கொரோனா வைரஸ் எதிரொலி; பத்தினம்திட்டா மாவட்டத்தில் 3 நாட்கள் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை


கொரோனா வைரஸ் எதிரொலி; பத்தினம்திட்டா மாவட்டத்தில் 3 நாட்கள் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை
x
தினத்தந்தி 9 March 2020 9:06 AM IST (Updated: 9 March 2020 9:06 AM IST)
t-max-icont-min-icon

கேரள மாநிலம் பத்தினம் திட்டா மாவட்டத்தில் கொரோனா வைரஸ் எதிரொலியால், கல்வி நிறுவனங்களுக்கு மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்,

சீனாவின் உகான் நகரில் பரவிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதையும் மிரட்டி வருகிறது. சீனாவில் மட்டும் இதுவரை 3,400க்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர், 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகில் 90 நாடுகளுக்கும் அதிகமாகப் பரவியுள்ள கொரோனா வைரசால், ஒட்டுமொத்தமாக ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இத்தாலியில் இருந்து கேரளா திரும்பிய ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் மற்றும் அவர்களது உறவினர் இருவர் என 5 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது என்று  அம்மாநில சுகாதாரத்துறை மந்திரி கே.கே.ஷைலஜா கூறினார்.  

மேலும் கொரோனா பாதிப்புள்ள 5 பேரையும் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வெளி நாடுகளிலிருந்து வரும் மக்கள் பொறுப்பை உணர்ந்து கட்டாயம் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை மந்திரி கே.கே.ஷைலஜா கூறினார்.

இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மாவட்ட அதிகாரிகளுடன் சுகாதாரத்துறை மந்திரி கே.கே.ஷைலஜா ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், பத்தினம் திட்டா மாவட்டம் முழுவதும் கல்வி நிறுவனங்களுக்கு மூன்று நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு திட்டமிட்டு நடைபெறும் என்றும், தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மாஸ்க் வழங்கப்படும் என்றும் அம்மாநில சுகாதாரத்துறை மந்திரி கே.கே.ஷைலஜா கூறினார். 

Next Story