பயண விவரங்களை மறைப்பது குற்றமாக கருதப்படும்; கேரள அரசு எச்சரிக்கை


பயண விவரங்களை மறைப்பது குற்றமாக கருதப்படும்;  கேரள அரசு எச்சரிக்கை
x
தினத்தந்தி 11 March 2020 4:10 AM GMT (Updated: 11 March 2020 4:15 AM GMT)

பயணிகள் தங்களின் பயண விவரங்களை மறைத்தால் அது குற்றமாக கருதப்படும் என்று கேரள அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

திருவனந்தபுரம், 

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. கேரளாவில் நேற்று ஒரே நாளில் மட்டும் புதிதாக 8 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது தெரியவந்தது. அதேபோல், கர்நாடகா, மராட்டியம் ஆகிய மாநிலங்களில் தலா 3 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது. 

கேரளாவில் கடந்த சில நாட்களில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. இந்த சூழலில், கேரளாவுக்கு வரும் பயணிகள் தங்களின் முந்தைய பயண விவரங்களை மறைத்தால், அது  பொது சுகாதார சட்டத்தின் கீழ் குற்றமாகக் கருதப்படும் என்று கேரள சுகாதாரத்துறை மந்திரி கே கே ஷைலஜா எச்சரிக்கை விடுத்துள்ளார். 

கேரளாவில் புதிதாக வைரஸ் தொற்றுக்கு உள்ளான 8 பேரில் 2 பேர்,  கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 3 வயதுக் குழந்தையின் பெற்றோர் ஆவர். இவர்கள் இத்தாலியிலிருந்து வந்ததை அதிகாரிகளிடம் தெரிவிக்காமல் மறைத்தனர் என்பது கவனிக்கத்தக்கது. 

Next Story