கொரோனா வைரஸ் பீதி: ஈரானில் தவிக்கும் 6 ஆயிரம் இந்தியர்களை அழைத்து வர முன்னுரிமை நாடாளுமன்றத்தில் ஜெய்சங்கர் தகவல்
கொரோனா வைரஸ் பீதியில் ஈரானில் சிக்கித் தவிக்கும் 6 ஆயிரம் இந்தியர்களை அழைத்துவர முன்னுரிமை அளிப்பதாக நாடாளுமன்றத்தில் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
புதுடெல்லி,
கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாக, நாடாளுமன்ற மக்களவையில் நேற்று மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் பேசினார். அவர் பேசியதாவது:-
ஈரான் நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் மிகவும் கவலைக்குரியதாக இருக்கிறது. அங்கு 6 இந்தியர்கள் சிக்கித் தவிக்கிறார்கள். அவர்களில் மராட்டியம், காஷ்மீர் ஆகிய மாநிலங்களை சேர்ந்த 1,100 யாத்ரீகர்களும், 300 மாணவர்களும் அடங்குவர்.
முதலில், யாத்ரீகர்களை இந்தியாவுக்கு அழைத்துவர முன்னுரிமை அளித்து வருகிறோம். ஏற்கனவே 58 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர். ஈரான் அதிகாரிகள் ஒத்துழைப்புடன் மற்ற இந்தியர்களையும் அழைத்து வருவோம். முதலில், இந்தியர்களை பரிசோதிப்பதற்காக, சுகாதார பணியாளர்கள் ஈரானுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இத்தாலியிலும் நிலைமை மோசமாக இருக்கிறது. கொரோனா பாதிப்பு இல்லாத இந்தியர்கள் அழைத்து வரப்படுவார்கள்.
மந்திரிகள் குழு கண்காணிப்பு
சர்வதேச கொரோனா வைரஸ் பாதிப்பு சூழ்நிலையை மத்திய சுகாதாரத்துறை மந்திரி தலைமையிலான மந்திரிகள் குழுவும், மந்திரிசபை செயலாளர் தலைமையிலான செயலாளர்கள் குழுவும் கண்காணித்து வருகின்றன.
கொரோனா பரவலை தடுக்க நடவடிக்கை எடுப்பதுடன், வெளிநாட்டினருக்கு மின்னணு விசா, இந்தியாவுக்கு வந்தவுடன் பெறும் விசா ஆகிய வசதிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
தரைவழி எல்லைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆகாயவழி மற்றும் கடல்வழி நுழைவுப்பகுதியிலும் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இந்தியர்கள் உலகம் முழுவதும் வாழ்ந்து வருகிறார்கள். ஆகவே, இப்பிரச்சினையை நாம் பொறுப்புடனும், நிதானமாகவும் அணுக வேண்டும். பீதியை உருவாக்கக்கூடாது.
இவ்வாறு ஜெய்சங்கர் பேசினார்.
Related Tags :
Next Story