கொரோனா எதிரொலி: கர்நாடகாவில் மால், தியேட்டர்கள் மூட உத்தரவு


கொரோனா எதிரொலி: கர்நாடகாவில்  மால், தியேட்டர்கள் மூட உத்தரவு
x
தினத்தந்தி 13 March 2020 10:03 AM GMT (Updated: 13 March 2020 10:06 AM GMT)

கொரோனா அச்சம் காரணமாக கர்நாடகாவில் தியேட்டர்கள் உள்ளிட்ட பொது இடங்களை மூட அம்மாநில முதல்-மந்திரி எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார்.

பெங்களூரு,

சீனாவில் தோன்றிய உயிர்க்கொல்லி நோயான கொரோனா வைரஸ் உலக நாடுகளை பயங்கரமாக அச்சுறுத்தி வருகிறது.

அந்த நோய்க்கு இதுவரை சுமார் 4 ஆயிரம் பேர் மரணம் அடைந்துள்ளனர். 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவையும் கொேரானா வைரஸ் விட்டு வைக்கவில்லை. 70-க்கும் மேற்பட்டவர்கள் அந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கர்நாடகத்தை பொறுத்தவரை அமெரிக்காவில் இருந்து வந்த பெங்களூருவை சேர்ந்த 40 வயதான கம்ப்யூட்டர் என்ஜினீயருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது முதலில் கண்டுப்பிடிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து அவருடைய மனைவி, குழந்தை, நண்பர் ஆகியோரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதனால் கர்நாடகத்திலும் கொரோனா பீதி ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக, அமெரிக்காவில் இருந்து வந்த கம்ப்யூட்டர் என்ஜினீயருடன் பழகியவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட கம்ப்யூட்டர் என்ஜினீயரின் கார் டிரைவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த வைரஸ் பரவுவதை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசு எடுத்து வருகிறது. 

இந்நிலையில்  கர்நாடகாவில் மக்கள் அதிகம் கூடும் இடங்களான மால், திரையரங்குகள், பள்ளிகள், கல்லூரிகள், உள்ளிட்ட பொது இடங்களை ஒரு வாரத்திற்கு மூடி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

கேளிக்கை நிகழ்ச்சிகள், திருமண நிகழ்வுகளையும் ஒரு வாரத்திற்கு தள்ளி வைக்க  அம்மாநில முதல்-மந்திரி எடியூரப்பா கேட்டுக்கொண்டுள்ளார்.  மேலும்  கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  கர்நாடகாவில் மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.  

கர்நாடகாவில் அனைத்து விளையாட்டு நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக பெங்களூரு முழுவதும் 1-ம் வகுப்பு முதல் 6-ம் வகுப்பு வரை தேர்வை ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story