மாநிலங்களவைக்கு காலியாக உள்ள 55 இடங்களுக்கான வேட்புமனு தாக்கல் முடிந்தது


மாநிலங்களவைக்கு காலியாக உள்ள 55 இடங்களுக்கான வேட்புமனு தாக்கல் முடிந்தது
x
தினத்தந்தி 13 March 2020 9:49 PM GMT (Updated: 13 March 2020 9:49 PM GMT)

மாநிலங்களவையில் காலியாக உள்ள 55 இடங்களுக்கு வருகிற 26-ந் தேதி தேர்தல் நடக் கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்தது. தமிழ்நாட்டில் காலியாக உள்ள 6 இடங்களுக்கு 9 பேர் போட்டியிடுகிறார்கள்.

புதுடெல்லி,

மாநிலங்களவையில் உறுப்பினர் பதவி விலகல் மற்றும் பதவிக்காலம் நிறைவடைந்ததால் 17 மாநிலங்களில் மொத்தம் 55 இடங்கள் காலியாக உள்ளது. இந்த காலியிடங்களை நிரப்புவதற்கான தேர்தல் 26-ந் தேதி நடைபெறும் என தேர்தல் கமிஷன் அறிவித்து உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் 6-ந் தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்ய நேற்று கடைசி நாள் ஆகும். இந்த தேர்தலில் மாநில சட்டசபை உறுப்பினர்கள் வாக்களிக்கிறார்கள். தேர்தல் அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டன.

இந்த தேர்தலில் மாநிலங்களவை துணை தலைவர் ஹரிவன்ஷ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய்சிங், சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாரதீய ஜனதா கட்சியில் இணைந்த ஜோதிர் ஆதித்ய சிந்தியா, அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால், நீராஜ் டாங்கி (ராஜஸ்தான்), தேபேந்திர ஹோடா, சுப்ரீம் கோர்ட்டு வக்கீல் கே.டி.எஸ்.துல்சி உள்ளிட்டோர் போட்டியிடுகிறார்கள்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாரதீய ஜனதா கட்சியில் இணைந்த ஜோதிர் ஆதித்ய சிந்தியா மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து போட்டியிடுகிறார். காங்கிரஸ் கட்சி சார்பில் மூத்த தலைவர் திக்விஜய்சிங் களத்தில் உள்ளார். இவர்கள் இருவரும் வெற்றி பெறுவது உறுதியாகி உள்ளது. அங்குள்ள 3 இடத்துக்கு போட்டி உள்ளது. மாநிலத்தில் சமீபத்தில் 22 எம்.எல்.ஏ.க்கள் பதவி விலகினர். அவர்களுக்கு இந்த தேர்தலில் ஓட்டுரிமை மறுக்கப்பட்டுள்ளது.

மராட்டியத்தில் இருந்து போட்டியிடும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், ராஜஸ்தானில் இருந்து போட்டியிடும் அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொது செயலாளர் கே.சி.வேணுகோபாலுக்கும் வெற்றி வாய்ப்பு உள்ளது.

தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்கு 6 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க. சார்பில் தலா 3 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

தி.மு.க. வேட்பாளர்கள் திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர்.இளங்கோ ஆகியோர் 9-ந் தேதியன்று வேட்புமனு தாக்கல் செய்தனர். 12-ந் தேதியன்று அ.தி.மு.க. வேட்பாளர்கள் தம்பிதுரை, கே.பி.முனுசாமி மற்றும் ஜி.கே.வாசன் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.

இவர்கள் தவிர சுயேச்சை வேட்பாளர்களாக இளங்கோ யாதவ், கு.பத்மராஜன், அக்னி ஸ்ரீராமச்சந்திரன் ஆகிய 3 பேர் வேட்புமனு தாக்கல் செய்து உள்ளனர். அந்த வகையில் வேட்புமனு தாக்கலுக் கான கடைசி நாளான நேற்று மாலை 3 மணி நிலவரப்படி மொத்தம் 9 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த தேர்தலுக்கு தி.மு.க. 3 வேட்பாளர்களை களம் இறக்கியுள்ளது. அ.தி.மு.க.வும் 3 வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. இவர்களுக்கு தலா 10 எம்.எல்.ஏ.க்கள் முன் மொழிவு அளித்துள்ளனர். வேட்புமனு பரிசீலனையின்போது எம்.எல்.ஏ.க்களின் முன்மொழிவு பெறாத வேட்பாளர் களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுவிடும்.


Next Story