கொரோனா அச்சம்: பேரவை நிகழ்வை பார்க்க அனுமதி மறுப்பு - பேரவையில் சபாநாயகர் தனபால் அறிவிப்பு


கொரோனா அச்சம்: பேரவை நிகழ்வை பார்க்க அனுமதி மறுப்பு - பேரவையில் சபாநாயகர் தனபால் அறிவிப்பு
x
தினத்தந்தி 16 March 2020 9:50 AM GMT (Updated: 16 March 2020 9:50 AM GMT)

கொரோனா அச்சம் காரணமாக மறு உத்தரவு வரும் வரை பேரவை நிகழ்வுகளை பார்க்க வரும் பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார்.

சென்னை

கொரோனா அச்சம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

தமிழகத்தில் தொடர்ந்து நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் மருத்துவ கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழக சட்டசபைக் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக இன்று வருகை தந்த எம்எல்ஏக்களுக்கு கொரோனா அறிகுறிகள் தொடர்பான பரிசோதனை செய்யப்பட்டது. சோதனைக்கு பிறகே எம்எல்எக்கள் சட்டசபைக்குள்  அனுமதிக்கப்பட்டனர். இதேபோல் சட்டசபை ஊழியர்களுக்கும் சோதனை நடத்தப்பட்டது.

சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தில் கவன ஈர்ப்பு தீர்மானத்தின் போது பேசிய சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவர் துரைமுருகன், கொரானா விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருப்பதாகவும், அனைத்து மாவட்ட மக்கள் மத்தியிலும் அச்சம் ஏற்பட்டிருப்பதாக பேசினார்.

சில மாநிலங்களில் பேரவையை தள்ளி வைத்திருக்கிறார்கள், சில மாநிலங்களில் உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைத்திருப்பதாகவும் கூறிய துரைமுருகன் சென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் முறையான பரிசோதனை இல்லை எனவும் தெரிவித்தார்.

மேலும் கூட்டம் கூட்டுவதை அரசியல் கட்சிகள் தவிர்க்க வேண்டும் எனவும் அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தை கூட்டி சட்டப்பேரவை கூட்டத்தொடர் குறித்து முடிவெடுக்க வேண்டும் எனவும் துரைமுருகன் வலியுறுத்தினார்.

அதற்கு பதிலளித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சட்டமன்றத்தில் பயமோ அச்சமோ வேண்டாம் எனவும் அரசு உங்களை முழுமையாக காப்பாற்றும் என உறுதியளித்தார்.

மேலும் முதல்வர் தலைமையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆலோசனை நடைபெற்றுள்ளது . அதற்காக 60 கோடி ரூபாயை உடனடியாக விடுவிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.மத்திய அரசு மற்றும் உலக சுகாதாரத்துறை நிறுவனத்தின் அறிவுறுத்தலை முறையாக பின்பற்றி வருகிறோம் எனவும் பொதுமக்கள் பதட்டமோ பீதியடையவோ தேவையில்லை எனவும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கமளித்தார்.

இந்த நிலையில் கொரனா வைரஸ் எதிரொலியாக  தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகளை பார்வையிட பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

கொரோனா அச்சம் காரணமாக , இன்று முதல் மறு உத்தரவு வரும் வரை பேரவை நிகழ்வுகளை பார்க்க வரும் பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக சபாநாயகர் தனபால் அறிவித்து உள்ளார்.

Next Story