நிர்பயா வழக்கு; தூக்கு தண்டனைக்கு தடை கோரி சர்வதேச நீதிமன்றத்தில் குற்றவாளிகள் மனு


நிர்பயா வழக்கு; தூக்கு தண்டனைக்கு தடை கோரி சர்வதேச நீதிமன்றத்தில் குற்றவாளிகள் மனு
x
தினத்தந்தி 16 March 2020 2:45 PM GMT (Updated: 2020-03-16T20:02:05+05:30)

நிர்பயா வழக்கு குற்றவாளிகளில் 3 பேர் தூக்கு தண்டனைக்கு தடை கோரி சர்வதேச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

புதுடெல்லி,

டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் முகேஷ்குமார் சிங், பவன்குப்தா, வினய்குமார் சர்மா, அக்‌ஷய்குமார் சிங் ஆகிய 4 குற்றவாளிகளுக்கு டெல்லி கோர்ட்டு தூக்கு தண்டனை விதித்தது. சுப்ரீம் கோர்ட்டும் இதனை உறுதி செய்தது.

அவர்கள் தரப்பில் ஒவ்வொருவராக மாறி மாறி தாக்கல் செய்த கருணை மனு, மறுஆய்வு மனு, சீராய்வு மனு போன்ற சட்ட நடவடிக்கைகளால் அவர்களை தூக்கில் போடுவது 2 முறை தள்ளிப்போய் இருந்தது.

இந்தநிலையில், குற்றவாளிகள் 4 பேரையும் மார்ச் 3ந்தேதி தூக்கில் போட டெல்லி கோர்ட்டு கடந்த பிப்ரவரி 17ந்தேதி உத்தரவிட்டது.

குற்றவாளிகளில் ஒருவரான பவன் குப்தா தரப்பில், சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மறு சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், கடந்த 2ந்தேதி ஜனாதிபதி முன் கருணை மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.  இந்த மனுவும் தள்ளுபடியானது.  இதனால் குற்றவாளிகள் 4 பேரின் கருணை மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களை தூக்கில் போடுவதற்கான சட்டப்பூர்வ தடை எதுவும் இல்லாத சூழல் ஏற்பட்டது.

கருணை மனு  நிராகரித்து 14 நாட்களுக்குள் அதன் விவரம் சட்டப்படி குற்றவாளிக்கு  தெரிவிக்கப்படவேண்டும்.  இதனால் குற்றவாளி பவன் குமார் குப்தாவுக்கு 14 நாட்கள் அவகாசம் கிடைத்தது. இதனால் 4 குற்றவாளிகளையும் தூக்கிலிடுவது தள்ளி வைக்கப்பட்டது.

இதை தொடர்ந்து டெல்லி ஐகோர்ட்டு, மறு உத்தரவு வரும் வரை நிர்பயா குற்றவாளிகளின் தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்க உத்தரவிட்டது.  இதனால் 3வது முறையாக தூக்கு தண்டனை நிறைவேற்றம் தள்ளி போனது.

இந்நிலையில், நிர்பயா வழக்கு குற்றவாளிகள் 4 பேருக்கும் வரும் 20ந்தேதி காலை 5.30 மணியளவில் தூக்கு தண்டனை நிறைவேற்ற டெல்லி நீதிமன்றம் புதிய மரண வாரண்ட் உத்தரவை பிறப்பித்தது.

4 குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங், தன்னுடைய வழக்கறிஞர் குரோவர் தன்னை தவறாக வழிநடத்தி விட்டார்.  அதனால் நீதிமன்றங்கள் பிறப்பித்த அனைத்து உத்தரவுகளையும் ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் சமர்ப்பித்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.

இதனை விசாரித்த நீதிமன்றம், மறுஆய்வு மற்றும் சீராய்வு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், இந்த மனு ஏற்க கூடியது இல்லை என கூறி அதனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இந்நிலையில், குற்றவாளிகளில் அக்ஷய், பவன் மற்றும் வினய் ஆகிய 3 பேரும் தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்கு தடை விதிக்க கோரி சர்வதேச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர்.

Next Story