மத்திய பிரதேசத்தில் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா கடிதம் மீது முடிவு எடுக்காதது ஏன்? - சபாநாயகருக்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி


மத்திய பிரதேசத்தில் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா கடிதம் மீது முடிவு எடுக்காதது ஏன்? - சபாநாயகருக்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
x
தினத்தந்தி 18 March 2020 11:15 PM GMT (Updated: 2020-03-19T03:40:14+05:30)

மத்திய பிரதேசத்தில் எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா கடிதம் மீது முடிவு எடுக்காதது ஏன்? என சபாநாயகருக்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.

புதுடெல்லி,

மத்திய பிரதேசத்தில் 22 எம்.எல்.ஏ.க்கள் சமீபத்தில் ராஜினாமா செய்ததால், கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. மாநில அரசு பெரும்பான்மையை இழந்துள்ளதால் சட்டசபையில் உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும் என்று முன்னாள் முதல்- மந்திரி சிவராஜ் சிங் சவுகான் மற்றும் 10 பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் பதிலளிக்குமாறு கமல்நாத், மத்திய பிரதேச சபாநாயகர், முதன்மை செயலாளர் ஆகியோருக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பி இருந்த நிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், ஹேமந்த் குப்தா ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

இதில் காங்கிரஸ் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் துஷ்யந்த் தவே, ‘பெங்களூருவில் 16 எம்.எல்.ஏ.க்கள் அடைத்து வைக்கப்பட்டது போன்ற நிலைமையில் உள்ள நிலையில் அந்த எம்.எல்.ஏ.க்கள் இல்லாமல் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவது சட்டவிரோதமானது’ என்று வாதிட்டார்.

பா.ஜனதா தரப்பில் வாதிட்ட மூத்த வக்கீல் முகுல் ரோத்தகி, காங்கிரஸ் கட்சி சட்டசபையில் பெரும்பான்மையை இழந்த நிலையில் அங்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடுவதற்கு கவர்னருக்கு அனைத்து அதிகாரம் உண்டு என்றும், எம்.எல்.ஏ.க்கள் யாரும் அடைத்து வைக்கப்படவில்லை என்றும் கூறினார்.

இந்த வாதங்களை கேட்ட நீதிபதிகள், எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா கடிதம் மீது சபாநாயகர் ஏன் முடிவெடுக்கவில்லை? என்று கேள்வி எழுப்பினர். மாநிலத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்ற நிலையில் இதுபோன்ற நிலை ஏற்பட்டுள்ளது எனக்கூறிய நீதிபதிகள், ஒரு மாநிலம் பட்ஜெட் தாக்கல் செய்யாமல் எப்படி செயல்பட முடியும்? என்றும் கேள்வி எழுப்பினர்.

அப்போது சபாநாயகர் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் அபிஷேக் சிங்வி, ராஜினாமா கடிதங்களின் மீது சபாநாயகர் எப்போது முடிவெடுப்பார்? என்பது குறித்து அவரிடம் கேட்டறிந்து நாளை (இன்று) தெரிவிப்பதாக கூறினார். இதைத்தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணையை நீதிபதிகள் இன்றைக்கு ஒத்திவைத்தனர்.


Next Story