கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிக்கிறது வீட்டை விட்டு வெளியே வந்தால் ‘முக கவசம் அணிவது கட்டாயம்’ - மத்திய அரசு அவசர உத்தரவு
கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால், வீட்டை விட்டு வெளியே வருபவர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்று மத்திய அரசு அவசர உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.
புதுடெல்லி,
உலகையே அச்சுறுத்தி வருகிற கொரோனா வைரஸ், இந்தியாவில் வேகமாக பரவ தொடங்கி இருக்கிறது.
மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வந்த போதிலும் நோய்க்கிருமி பரவும் வேகத்தை முழுமையாக கட்டுப் படுத்த முடியவில்லை.
இதனால் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளானோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்து விட்டது. பலியானோரின் எண்ணிக்கை 100-ஐ நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தபோதிலும், டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்களாலும், டெல்லி ஆனந்த் விகார் பஸ் முனையம் மற்றும் ரெயில் தடத்தில் கூடிய இடம் பெயர்ந்த தொழிலாளர்களாலும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து உள்ளது.
ஊரடங்கையொட்டி பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக் கப்பட்டுள்ள போதிலும் மக்கள் நடமாட்டத்தை தடுத்து நிறுத்துவது போலீசாருக்கு பெரும் சவாலாக உள்ளது.
பல இடங்களில் கடைகள், மார்க்கெட்டுகளுக்கு செல்பவர்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமல் நடந்து கொள்கிறார்கள். முக கவசம் அணியாமலும் நடமாடுகிறார்கள். சிலர் தேவை இல்லாமல் வாகனங்களில் வெளியே சுற்றுவதையும் காணமுடிகிறது. இந்தநிலையில் மத்திய அரசு நேற்று ஒரு அவசர உத்தரவு பிறப்பித்தது.
அதில் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே கால் வைத்தால், வீட்டில் தயாரிக் கப்படுகிற சாதாரண முக கவசங்களை கட்டாயம் அணிந்து கொண்டுதான் வெளியே வர வேண்டும் என்றும், கொரோனா வைரசை கட்டுப்படுத்த இது மிகவும் அவசியம் என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.
மேலும் அதில், இத்தகைய முக கவசங்களை அணிவதால், சமூகத்தில் பெரிய அளவில் கொரோனா வைரஸ் பரவுவதில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள முடியும் என்றும், பல நாடுகளில் வீட்டில் தயாரிக்கப்பட்ட முக கவசங்களை அணிந்து கொண்டு கொரோனா வைரஸ் பிடியில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்து பலன் அடைந்துள்ளனர் என்றும் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.
அமெரிக்காவில் அந்த நாட்டின் ஜனாதிபதி டிரம்ப், கொடிய கொரோனா வைரசை எதிர்த்து போரிடுவதற்கு, கூடுதல் பொது சுகாதார நடவடிக்கையாக சாதாரண (மருத்துவ ரீதியில் பயன்படுத்தாதது) முக கவசங்களை அணியுமாறு மக்களை அறிவுறுத்தி உள்ளார்.
வீட்டில் தயாரிக்கக்கூடிய அல்லது ஆன்லைனில் கிடைக்கக்கூடிய சாதாரண துணியிலான முக கவசங்களை பயன்படுத்துமாறு நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான அமெரிக்க மையம் கேட்டுக்கொண்டு உள்ளது.
Related Tags :
Next Story