கொரோனா எதிரொலி; பிரதமர் உள்பட எம்.பி.க்கள் ஊதியத்தில் 30% பிடித்தம் செய்ய மத்திய அமைச்சரவை முடிவு


கொரோனா எதிரொலி; பிரதமர் உள்பட எம்.பி.க்கள் ஊதியத்தில் 30% பிடித்தம் செய்ய மத்திய அமைச்சரவை முடிவு
x
தினத்தந்தி 6 April 2020 11:00 AM GMT (Updated: 6 April 2020 11:00 AM GMT)

கொரோனா எதிரொலியாக பிரதமர் உள்பட எம்.பி.க்கள் ஊதியத்தில் 30% பிடித்தம் செய்ய மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

புதுடெல்லி,

புதுடெல்லியில் பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டம் காணொலி காட்சி வழியே இன்று நடந்தது.  இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும் பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தின் முடிவில், கொரோனா பாதிப்பு எதிரொலியாக பிரதமர் உள்பட எம்.பி.க்களின் ஊதியத்தில் 30% பிடித்தம் செய்வது என முடிவு செய்யப்பட்டு உள்ளது.  இதேபோன்று குடியரசு தலைவர், குடியரசு துணை தலைவர் மற்றும் ஆளுநர்களின் ஊதியத்திலும் 30% பிடித்தம் செய்யப்படும்.

ஓய்வூதியம் பெறும் முன்னாள் எம்.பி.க்களின் ஊதியத்தில் இருந்தும் 30% பிடித்தம் செய்யப்படும்.  ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும் நடைமுறை ஓராண்டுக்கு அமலில் இருக்கும்.  எம்.பி.க்களின் தொகுதி மேம்பாட்டு நிதி அடுத்த 2 ஆண்டுகளுக்கு நிறுத்தப்படுகிறது.  இதனால் எம்.பி.க்களின் தலா 10 கோடி ரூபாய் நிதி அரசு நிதியில் சேர்க்கப்படும்.

ஊதிய குறைப்பால் சேமிக்கப்படும் நிதி கொரோனா நிவாரண நிதியில் சேர்க்கப்படும்.  இந்த அவசர சட்டம் உடனடியாக அமலுக்கு வந்தது.  இதனால் அரசுக்கு ரூ.7,900 கோடி மிச்சப்படும்.  இந்த நடைமுறை ஏப்ரல் 1ந்தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story