“செல்ல நாய்களும், பூனைகளும் பரப்புவது கொரோனா அல்ல; அன்பு” - மேனகா காந்தி, பிராணிகள் நல ஆர்வலர்கள் கருத்து
செல்ல நாய்களும், பூனைகளும் கொரோனா வைரசை பரப்புவதில்லை, அவை அன்பைத்தான் பரப்புகின்றன என்று மேனகா காந்தியும், பிராணிகள் நல ஆர்வலர்களும் கூறினர்.
புதுடெல்லி,
நாய்களும், பூனைகளும் செல்லப்பிராணிகளாக வீடுகளில் வளர்க்கப்படுகின்றன. ஆனால் இந்த நாய்களும், பூனைகளும் கொரோனா வைரசை பரப்புவதாக தவறான தகவல்கள் பரவி வருகின்றன. இதன் காரணமாக இந்தியாவில் பல இடங்களில் பூனைகளும், நாய்களும் தாக்குதலுக்கு ஆளாகி உள்ளன. இது பிராணிகள் நல ஆர்வலர்களை மிகுந்த வேதனைக்கு உள்ளாக்கி உள்ளது. இதுபற்றிய அவர்களின் கருத்து வருமாறு:-
முன்னாள் மத்திய மந்திரி மேனகா காந்தி:-
பூனைகள் கொரோனா வைரசை பெறுவதும் இல்லை. கொடுப்பதுவும் இல்லை. ஒரு உயிரியல் பூங்காவில் உள்ள புலிக்கு கொரோனா வைரஸ் பரவி இருப்பதாக வெளியான முட்டாள்தனமான தகவலை டி.வி.யில் நீங்கள் பார்த்திருக்கக்கூடும். நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். பூனைகள், புலிகள் அல்ல. அவற்றுக்கு இடையே உறவு இல்லை. அப்படி உறவு இருப்பதாக கருதினால், அது நாய்களை ஓநாய்களுடன் ஒப்பிடுவதற்கு சமம்.
உங்கள் பூனைகள் சுற்றிலும் இருப்பது முற்றிலும் பாதுகாப்பானது. அவற்றுக்கு மக்கள் உணவு கொடுக்க அனுமதியுங்கள். ஒவ்வொரு காலனியிலும் பூனைகளை அனுமதியுங்கள். அவை மிகப்பெரிய சொத்து.
மல்யுத்த வீரர் சங்கிராம் சிங்:-
பூனைகளும், நாய்களும் கொரோனா வைரசை பரப்புகின்றன என்பது சரியானது அல்ல. இது தவறான தகவல். செல்லப் பிராணிகள் ஒன்றை மட்டுமே பரப்புகின்றன. அந்த ஒன்று, அன்பு. எனவே உங்கள் செல்லப்பிராணிகளை நன்றாக பார்த்துக்கொள்ளுங்கள். தெரு விலங்குகள் கவனிக்கப்படுவதையும் உறுதி செய்யுங்கள்.
முகேஷ் பத்ரா (நிறுவனம், பத்ராஸ் பாசிட்டிவ் ஹெல்த் கிளினிக்):-
இப்போது பரவுகிற புதிய வைரஸ், செல்லப்பிராணிகளிடம் இருந்து பரவவில்லை. உண்மையில் அவற்றிடம் இருந்து நீங்கள் அன்பைத்தான் பெறுகிறீர்கள். இந்த தருணங்களில் அந்த அன்புதான் உங்கள் வாழ்க்கையை தொடர வைக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.
Related Tags :
Next Story