ஒடிசாவில் ஊரடங்கு 30-ந் தேதி வரை நீட்டிப்பு - முதல் மந்திரி நவீன் பட்நாயக் அறிவிப்பு
ஒடிசா மாநிலத்தில் ஊரடங்கு வருகிற 30-ந் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக முதல் மந்திரி நவீன் பட்நாயக் அறிவித்து உள்ளார்.
புவனேஸ்வரம்,
கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் கடந்த மாதம் 25-ந் தேதி முதல் 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. இந்த ஊரடங்கு வருகிற 14-ந் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. இந்த நிலையில், கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பல்வேறு மாநில முதல்-மந்திரிகளும், நிபுணர்களும் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக் கொண்டு உள்ளனர். எனவே அதுபற்றி மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது.
இந்த நிலையில், இந்தியாவில் முதல் மாநிலமாக ஒடிசாவில் ஊரடங்கு வருகிற 30-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. அந்த மாநில முதல்-மந்திரி நவீன் பட்நாயக் முதன் முதலாக நேற்று காணொலி காட்சி மூலம் மந்திரிசபை கூட்டத்தை நடத்தினார். பின்னர் வீடியோ மூலம் அவர் செய்தி ஒன்றை வெளியிட்டார்.
அதில் அவர் கூறி இருப்பதாவது:-
கொரோனாவால் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழ்நிலையை சமாளிக்க ஆதரவு அளித்து வரும் 4½ கோடி ஒடிசா மக்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கடுமையான, நிச்சயமற்ற இந்த சூழ்நிலையில் மக்கள் நிறைய தியாகங்களை செய்து வருவதை நான் அறிவேன். கடந்த மாதம் 15-ந் தேதி ஒடிசாவில் முதல் பாதிப்பு ஏற்பட்டது. இப்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 42 ஆக உள்ளது. சக்திவாய்ந்த நாடான அமெரிக்காவில் 4 லட்சத்துக்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு இன்னும் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்படவில்லை.
இக்கட்டான இந்த சூழ்நிலையில் மக்களை பாதுகாக்கும் வகையில் ஒடிசா மாநிலத்தில் ஊரடங்கை வருகிற 30-ந்தேதி வரை நீட்டிக்க அரசு முடிவு செய்து உள்ளது. இதேபோல் நாடு முழுவதும் 30-ந் தேதி வரை ஊரடங்கை நீட்டிக்குமாறும், அதுவரை ரெயில், விமான போக்குவரத்தை தொடங்க வேண்டாம் என்றும் மத்திய அரசை கேட்டுக் கொள்வோம்.
மேலும் ஒடிசாவில் பள்ளி மற்றும் கல்லூரிகள் ஜூன் 17-ந் தேதி வரை மூடப்பட்டு இருக்கும். இவ்வாறு நவீன் பட்நாயக் கூறி உள்ளார்.
Related Tags :
Next Story