கொரோனா தடுப்பு நடவடிக்கை; மத்திய அரசு ரூ.15 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு


கொரோனா தடுப்பு நடவடிக்கை; மத்திய அரசு ரூ.15 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு
x

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக மத்திய அரசு ரூ.15 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா வைரஸ் தனது கோர முகத்தை காட்டி வருகிறது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை எட்டியுள்ளநிலையில், பலி எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. கொரோனா பாதிப்பு குறித்து கடந்த மாதம் 24-ந்தேதி நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் நரேந்திரமோடி கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கும் நாட்டின் மருத்துவ உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கும் ரூ.15 ஆயிரம் கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்வதாக அறிவித்தார்.

அதன்படி கொரோனா அவசர கால தேவை மற்றும் சுகாதார அமைப்பு தயார் நிலை நிதியாக ரூ.15 ஆயிரம் கோடியை மத்திய அரசு நேற்று ஒதுக்கீடு செய்தது. இதில் ரூ.7 ஆயிரத்து 774 கோடி கொரோனா வைரஸ் தடுப்புக்கான உடனடி தேவைக்கும், மீதித்தொகை நீண்ட கால அடிப்படையிலும் நடுத்தர காலத்துக்கான தேவைக்காகவும் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story