ஊரடங்கு முடிவுக்கு வருமா? நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி மீண்டும் உரையாற்ற வாய்ப்பு


File Photo
x
File Photo
தினத்தந்தி 10 April 2020 3:47 PM GMT (Updated: 10 April 2020 3:47 PM GMT)

கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்றே மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.

புதுடெல்லி,

சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பால் வல்லரசு நாடான அமெரிக்காவே விழி பிதுங்கி நிற்கிறது. கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்துகள் இன்னும் கண்டுபிடிக்காததால், சமூக விலகல் மூலமே நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த முடியும் என்று மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். இதனால், பல்வேறு நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

கடந்த மாதம் 24 ஆம் தேதி நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவித்தார். இந்த ஊரடங்கு வரும் 14 ஆம் தேதியோடு முடிவுக்கு வருகிறது. இந்தியாவில் தொடர்ந்து கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதால் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்துவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 

எனவே, ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாகப் பிரதமர் நரேந்திர மோடி அனைத்து மாநில முதல்-அமைச்சர்களுடன் கலந்து ஆலோசித்து விட்டு நாளை முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இது தொடர்பாக நாட்டு மக்களுக்குப் பிரதமர் மோடி, மீண்டும் ஒரு முறை உரையாற்றலாம் எனத்தெரிகிறது. 

ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்றே மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும்,  தற்போதுள்ள கட்டுப்பாடுகளில் சில மாற்றங்கள் இருக்கலாம் என்று தெரிகிறது.  மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து தொடர்ந்து கட்டுப்படுத்தப்படும்  என்றே கூறப்படுகிறது. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் விதி விலக்கு அளிக்கப்படும் எனவும், பள்ளி, கல்லூரிகள், மத நிலையங்கள், உள்ளிட்டவை தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும் எனவும் தகவல்கள் கூறுகின்றன.  

ஊரடங்கினால் பொருளாதாரத்தில் மிகப் பெரிய தேக்கம் ஏற்பட்டுள்ளதால், சில துறைகளுக்குக் கட்டுப்பாடுகளுடன் கூடிய தளர்வு கொடுக்கப்படலாம். ஊரடங்கினால் விமான போக்குவரத்துத் துறை மிகக்கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, சில கட்டுப்பாடுகளுடன்  மீண்டும் விமானப் போக்குவரத்துத் தொடங்கப்படலாம் எனத் தெரிகிறது.   கடந்த வியாழக் கிழமை நாட்டில் உள்ள அனைத்துப் பிரதான கட்சித் தலைவர்களுடனும் பிரதமர் மோடி பேசினார். அப்போது, ஊரடங்கை முழுமையாக நீக்குவது சாத்தியமில்லை என்று கூறியதாகத் தகவல்கள் வெளிவந்தன. 

Next Story