கொரோனாவை கட்டுப்படுத்த 5 தமிழக மாவட்டங்கள் உள்பட 36 மாவட்டங்கள் மீது தீவிர கவனம் தேவை - மருத்துவ கவுன்சில் ஆராய்ச்சியில் பரபரப்பு தகவல்


கொரோனாவை கட்டுப்படுத்த 5 தமிழக மாவட்டங்கள் உள்பட 36 மாவட்டங்கள் மீது தீவிர கவனம் தேவை  - மருத்துவ கவுன்சில் ஆராய்ச்சியில் பரபரப்பு தகவல்
x
தினத்தந்தி 10 April 2020 11:50 PM GMT (Updated: 10 April 2020 11:50 PM GMT)

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில், தமிழகத்தின் 5 மாவட்டங்கள் உள்பட 36 மாவட்டங்களில் தீவிர கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

புதுடெல்லி, 

இந்தியாவில் வேகமாக பரவி வருகிற கொரோனா வைரசை கட்டுப்படுத்துவது தொடர்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஐ.சி.எம்.ஆர்., தொடர்ந்து பல்வேறு ஆராய்ச்சிகளை நடத்தி வருகிறது.

அந்த வகையில் கடந்த பிப்ரவரி மாதம் 15-ந்தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 2-ந் தேதி வரையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானோர் பற்றிய தகவல்களை ஆராய்ந்து அறிந்துள்ளது. இதில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. அவை வருமாறு:-

* கொரோனா வைரஸ் பாதித்த மொத்தம் 5,911 பேரில் 104 பேர் (1.8 சதவீதம்) கடுமையான சுவாச தொற்றால் பாதிக் கப்பட்டவர்கள் ஆவார்கள்.

இவர்களில் 40 சதவீதம்பேர் கொரோனா வைரஸ் தொற்று உள்ளவர்களுடன் எந்தவிதமான தொடர்பும் இல்லாதவர்கள். எந்த வெளிநாட்டு பயணமும் மேற்கொண்டு இராதவர்கள்.

இவர்கள் அனைவரும் தமிழகத்தின் 5 மாவட்டங்கள் உள்பட 15 மாநிலங்களின் 36 மாவட்டங்களை சேர்ந்தவர்கள். மற்றவர் மாநிலங்களில் மராட்டியம் (8), மேற்கு வங்காளம் (6), டெல்லி (5) முக்கியமானவை.

* 2 சதவீதம்பேர், கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள். 1 சதவீதம்பேர் கொரோனா பாதித்த நாட்டுக்கு சென்று வந்தவர்கள்.

* கடந்த மார்ச் மாதம் 14-ந் தேதி வரையில், கடுமையான சுவாச தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், கொரோனா தொற்றுக்கு ஆளாகவில்லை.

* மார்ச் மாதம் 14-ந் தேதியில் இருந்து ஏப்ரல் மாதம் 2-ந் தேதி வரையில் கடுமையான சுவாச தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 2.6 சதவீதம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதாவது, மார்ச் 14-ந் தேதி வரை கடுமையான சுவாச தொற்றால் பாதிக்கப்பட்டாலும் கொரோனா தொற்றுக்கு ஆளாகவில்லை என்று இருந்த நிலை, அதன்பின்னர் மாறி 2.6 சதவீதம் பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி இருக்கிறார்கள்.

* கொரோனா வைரஸ் தொற்று பெண்களை விட ஆண்களையே அதிகம் பாதிக்கிறது. அதுவும், 50 வயதுக்கு மேற்பட்டவர்களையே அதிகம் பாதிக்கிறது.

* கடுமையான சுவாச தொற்று நோய் பாதித்து, கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களை கொண்டுள்ள 36 மாவட்டங்கள் மீது கடுமையான கவனம் செலுத்த வேண்டும்.

இந்த மாவட்டங்கள் கட்டுப்பாட்டு இலக்காக கொள்ளப்பட வேண்டும். அப்போதுதான் கொரோனா வைரஸ் பரவலை அடையாளம் காண முடியும், எந்தளவுக்கு பரவல் இருக்கிறது என்பதையும் அறிய முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story