நாடு முழுவதும் ஊரடங்கை நீட்டிப்பது பற்றி முதல்-மந்திரிகளுடன் மோடி ஆலோசனை - விரைவில் அறிவிப்பு வெளியாகும்


நாடு முழுவதும் ஊரடங்கை நீட்டிப்பது பற்றி முதல்-மந்திரிகளுடன் மோடி ஆலோசனை - விரைவில் அறிவிப்பு வெளியாகும்
x
தினத்தந்தி 12 April 2020 12:15 AM GMT (Updated: 2020-04-12T05:38:38+05:30)

நாடு முழுவதும் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மாநில முதல்-மந்திரிகளுடன் பிரதமர் மோடி நேற்று ஆலோசனை நடத்தினார். இதுபற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

புதுடெல்லி, 

கொரோனா பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மாதம் 25-ந் தேதி முதல் நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கு வருகிற 14-ந் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. ஊரடங்கையொட்டி பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள போதிலும் கொரோனாவின் தாக்கம் குறையவில்லை. கொரோனாவால் பாதிக்கப்படுபவர் கள் மற்றும் பலியாகிறவர் களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று பல மாநிலங்களின் முதல்-மந்திரிகளும், நிபுணர்களும் மத்திய அரசை கேட்டு கொண்டு உள்ளனர். பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் ஊரடங்கை நீட்டிப்பதற்கு ஆதரவான கருத்தை தெரிவித்து இருக்கிறார் கள்.

நிபுணர் குழு பரிந்துரை

ஒடிசா, பஞ்சாப், மராட்டியம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் வருகிற 30-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று அந்த மாநில முதல்-மந்திரிகள் அறிவித்து உள்ளனர். இதேபோல் தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிக்க மருத்துவ குழுவினர் பரிந்துரை செய்து உள்ளனர். கர்நாடகத்தில் ஊரடங்கை நீட்டிக்க அந்த மாநில மந்திரிசபை சிபாரிசு செய்து இருக்கிறது.

முதல்-மந்திரிகளுடன் மோடி ஆலோசனை

இந்த நிலையில், பிரதமர் மோடி டெல்லியில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் நேற்று காலை 11 மணிக்கு மாநில முதல்-மந்திரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அவருடன் மத்திய சுகாதார துறை அமைச்சகத்தைச் சேர்ந்த உயர் அதிகாரிகளும் இருந்தனர்.

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் சந்திரசேகர ராவ் (தெலுங் கானா), எடியூரப்பா (கர்நாடகம்), யோகி ஆதித்யநாத் (உத்தரபிரதேசம்), நிதிஷ்குமார் (பீகார்), உத்தவ் தாக்கரே (மராட்டியம்), மம்தா பானர்ஜி (மேற்கு வங்காளம்), மனோகர்லால் கட்டார் (அரியானா), கெஜ்ரிவால் (டெல்லி) உள்ளிட்ட மாநில முதல்-மந்திரிகள் இந்த ஆலோசனையில் பங்கேற்றனர். ஆலோசனையின் போது பிரதமர் மோடி முக கவசம் அணிந்து இருந்தார். இதேபோல் மாநில முதல்-மந்திரிகளும் முக கவசம் அணிந்து இருந்தனர்.

நீட்டிக்க கோரிக்கை

கொரோனா காரணமாக நாட்டில் நிலவும் சூழ்நிலை, நோய்க்கிருமி பரவுவதை கட்டுப்படுத்த அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள், ஊரடங்கின் காரணமாக ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனையில் பங்கேற்ற முதல்-மந்திரிகளிடம், பிரதமர் மோடி விளக்கி கூறியதோடு, அவர்கள் கூறிய கருத்துகளையும் கேட்டு அறிந்தார்.

ஊரடங்கின் காரணமாக அத்தியாவசிய பொருட்கள் தடை இன்றி கிடைக்க மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று முதல்-மந்திரிகள் கேட்டுக் கொண்டனர். டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்-மந்திரி அமரிந்தர் சிங் உள்ளிட்ட சில முதல்-மந்திரிகள் நாடு முழுவதும் ஊரடங்கை வருகிற 30-ந் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

2 வாரங்கள்

கூட்டம் முடிந்த பின் நிருபர்களிடம் பேசிய மத்திய அரசின் செய்தித் தொடர்பாளர், பெரும்பாலான மாநிலங்கள் ஊரடங்கை மேலும் 2 வாரங்கள் நீட்டிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாகவும், அதுபற்றி அரசு பரிசீலித்து வருவதாகவும் தெரிவித்தார்.

ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு பெங்களூருவில் நிருபர்களிடம் பேசிய கர்நாடக முதல்- மந்திரி எடியூரப்பா, ஊரடங்கை நீட்டிப்பது தவிர்க்க முடியாதது என்றும், மேலும் 15 நாட்கள் நீட்டிப்பது தொடர்பான வழிமுறைகள் இன்னும் இரு தினங்களில் வெளியிடப்படும் என்றும் முதல்-மந்திரிகளிடம் மோடி தெரிவித்ததாக கூறினார். அத்துடன், இந்த 3 வார ஊரடங்கைவிட 14-ந் தேதிக்கு பிந்தைய ஊரடங்கு மாறுபட்டதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

மத்திய அரசு அறிக்கை

முதல்-மந்திரிகளுடன் மோடி நடத்திய ஆலோசனை குறித்து மத்திய அரசின் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

முதல்-மந்திரிகளுடன் பேசிய மோடி, எதிர்காலத்தில் இந்தியா பிரகாசமாகவும், வளமாகவும் சுகாதாரமாகவும் இருக்க வேண்டுமானால் உயிரை காப்பாற்றி, வாழ்வாதாரத்தை பாதுகாப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்றார். ஊரடங்கை அறிவித்த போது ‘உயிரை காப்போம், உலகை பாதுகாப்போம்’ என்று தான் கூறியதற்கு ஏற்ப மக்கள் தங்கள் வீடுகளுக்கு உள்ளேயே இருந்து பொறுப்புடன் நடந்து கொள்கிறார்கள் என்றும், அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களை ஏற்று இப்படி பொறுப்புடன் நடந்து கொள்வதன் மூலம் கொரோனாவுக்கு எதிரான போரை மேலும் வலுப்படுத்த முடியும் என்றும் மோடி கூறினார்.

கருத்தொற்றுமை

ஊரடங்கை மேலும் 2 வாரங்கள் நீட்டிக்க கருத்தொற்றுமை ஏற்பட்டு இருப்பது பற்றியும், கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக இதுவரை எடுத்த நடவடிக்கைகளின் விளைவுகளை அறிய அடுத்த 3 வாரங்கள் முக்கியமானவை என்றும் ஆலோசனையின் போது மோடி தெரிவித்தார்.

மருத்துவ சிகிச்சைக்கு தேவையான சாதனங்கள், பாதுகாப்பு உபகரணங்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார். கொரோனாவை ஒழிக்கும் நடவடிக்கைக்கு போதிய நிதி உதவி வழங்க வேண்டும் என்று பிரதமரை முதல்-மந்திரிகள் கேட்டுக் கொண்டனர். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

விரைவில் அறிவிப்பு

ஊரடங்கை ஒரே சமயத்தில் ஒட்டு மொத்தமாக நீக்க முடியாது என்று மத்திய அரசு ஏற்கனவே கூறி இருக்கிறது. இதற்கிடையே விவசாயிகளும், தொழில்துறையைச் சேர்ந்தவர்களும் சில அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ள ஊரடங்கில் சில கட்டுப்பாடுகளை தளர்த்தவேண்டும் என்று கேட்டுக் கொண்டு உள்ளனர்.

எனவே ஊரடங்கு மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்படும் என்றும், மாவட்டங்களில் நிலவும் பாதிப்புகளுக்கு ஏற்ப சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்படலாம் என்றும் தெரிகிறது. இதுபற்றிய அறிவிப்பை மத்திய அரசு 14-ந் தேதிக்கு முன்பு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story