எல்லை கட்டுப்பாடு கோடு அருகே இந்திய ராணுவ தாக்குதலில் 8 பயங்கரவாதிகள் 15 பாகிஸ்தான் வீரர்கள் பலி
ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரில் பாககிஸ்தான் இராணுவ முகாம் மற்றும் பயங்கரவாத ஏவுதளங்களை குறிவைத்த இந்திய இராணுவத்தின் தாக்குதலில் 8 பயங்கரவாதிகள் 15 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
புதுடெல்லி
ஏப்ரல் 10 ம் தேதி பாகிஸ்தான் எல்லைக்கட்டுப்பாடு கோட்டை தாண்டி கெரான் மற்றும் துட்னியல் பகுதியில் பாகிஸ்தான் மற்றும் பயங்கரவாதிகளின் ஏவு தளங்களில் இந்திய இராணுவம் நடத்திய பீரங்கித் தாக்குதலில் எட்டு பயங்கரவாதிகள் மற்றும் 15 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு நிறுவனத்தை சேர்ந்த இருவர் இந்துஸ்தான் டைம்ஸிடம் தெரிவித்து உள்ளனர்
கிஷங்கங்கா ஆற்றின் கரையில், பாகிஸ்தானின் போர்நிறுத்த மீறல்களுக்கு பதிலடி கொடுக்கும் நோக்கில் துத்னியல் தளங்கள் குறி வைக்கப்பட்டது. இந்த மலை நகரத்திலிருந்துதான் ஏப்ரல் 5 ம் தேதி கெரான் துறையில் இந்திய ராணுவ சிறப்புப் படையினரால் 5 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
கொல்லப்பட்ட ஐந்து பயங்கரவாதிகளில், மூன்று பேர் ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்தவர்கள், மற்ற இருவர் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பில் பயிற்சி பெற்றவர்கள் என்று கூறப்படுகிறது. அவர்களை அடையாளம் காணும் முயற்சிகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன.
ஷர்தா, துட்னியல் மற்றும் ஷாகோட் துறைகளில் இந்திய ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியதை பாகிஸ்தான் ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால் 15 வயது சிறுமி உட்பட நான்கு பொதுமக்கள் மட்டுமே பலத்த காயம் அடைந்ததாக கூறி உள்ளது.
இந்திய உளவுத்துறை தரப்பில் பாகிஸ்தான் தரப்பில் பலியானவர்களின் எண்ணிக்கையை மறைக்க முயற்சிப்பதாக கூறப்படுகிறது.
2020 ல் 708 போர்நிறுத்த மீறல்கள் நடைபெற்று உள்ளதாக இந்திய ராணுவம் பாகிஸ்தானை குற்றம் சாட்டி உள்ளது. இதில் இரண்டு பொதுமக்கள் கொல்லப்பட்டனர், மேலும் 42 பேர் காயமடைந்தனர்.
பாகிஸ்தான் இராணுவ செய்தித் தொடர்பாளர் கூறுகையில், பாகிஸ்தான் ராணுவம் இந்திய தாக்குதலை ஆயுதக் காலிபர் மூலம் அல்லது பீரங்கித் துப்பாக்கிகள் மற்றும் கனரக மோர்டார்கள் வைத்தது தடுத்து எதிர்தாக்குதலை நடத்தியதாக கூறி உள்ளார்.
லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ் இ முகமது மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகி அமைப்புகளை சேர்ந்த 160 பயங்கரவாதிகள் காஷ்மீருக்குள் ஊடுருவ காத்திருக்கிறார்கள் என்பதால் இந்திய இராணுவத்திற்கு ஏவுதளங்களை குறிவைப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று கூறப்படுகிறது.
அதுபோல் ரஜோரி மற்றும் ஜம்மு பகுதியில் பிர் பஞ்சலுக்கு தெற்கே உள்ள இடங்களில் 70 ஜெய்ஷ் பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் நுழைவதற்கான வாய்ப்புக்காக காத்திருப்பதை உளவுத்துறை அறிக்கைகள் சுட்டிக்காட்டி உள்ளன.
ஜம்மு-காஷ்மீரில் மொத்தம் சுமார் 242 பயங்கரவாதிகள் இருப்பதாக புலனாய்வு அமைப்புகள் மதிப்பிட்டுள்ளன. காஷ்மீர் வல்லுநர்களின் கூற்றுப்படி, இந்த எண்ணிக்கை 300 ஐத் தாண்டடும் தருணத்தில், வன்முறை மற்றும் பாதுகாப்புப் படையினர் மற்றும் பாகிஸ்தானுக்கு எதிராகப் பேசும் அரசியல் தலைவர்கள் மீது தாக்குதல்கள் அதிகரிக்கும் என்று கடந்த கால அனுபவங்கள் காட்டுகின்றன.
Related Tags :
Next Story