20-ந் தேதி முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வு - மத்திய அரசு அறிவிப்பு


20-ந் தேதி முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வு - மத்திய அரசு அறிவிப்பு
x
தினத்தந்தி 16 April 2020 12:15 AM GMT (Updated: 15 April 2020 11:58 PM GMT)

20-ந்தேதி முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக அறி வித்துள்ள மத்திய அரசு, சில நிபந்தனைகளுடன் கட்டுமான பணிகள் நடைபெறவும், தொழிற்சாலைகள் இயங்கவும் அனுமதி அளித்து இருக்கிறது.

புதுடெல்லி, 

கொரோனா வைரஸ் பாதிப்பை தொடர்ந்து கடந்த மாதம் 25-ந்தேதி முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு நேற்று முன்தினம் முடிவடைவதாக இருந்தது.

ஆனால் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து வருவதால் ஊரடங்கு வருகிற மே மாதம் 3-ந்தேதி வரை நீட்டிக்கப்படுவதாக நேற்று முன்தினம் பிரதமர் மோடி அறிவித்தார். அப்போது, மக்கள் சந்திக்கும் இடர்பாடுகளை கருத்தில் கொண்டு சில விலக்குகள் அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

ஊரடங்கு மேலும் 19 நாட்கள் நீட்டிக்கப்பட்டு இருக்கும் நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று சில வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்தது. அதில் ஏற்கனவே உள்ள பல கட்டுப்பாடுகள் தொடருவதாக கூறப்பட்டு உள்ளது. அதேசமயம் மக்களின் சிரமங்களை போக்கும் வகையில், வருகிற 20-ந்தேதி முதல் சில பணிகளை தொடங்க அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது.

அதுபற்றிய விவரம் வருமாறு:-

முக கவசம் கட்டாயம்

* அனைத்து பொது இடங்களிலும், பணிபுரியும் இடங்களிலும் மக்கள் முக கவசம் அணிவது கட்டாயம் ஆகும்.

* மே மாதம் 3-ந்தேதி வரை ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்துக்கோ, ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்கோ மக்கள் செல்ல தடை விதிக்கப்படுகிறது. மருத்துவ சிகிச்சைக்காக செல்பவர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும்.

* பஸ், ரெயில், மெட்ரோ ரெயில் சேவை மற்றும் உள்நாட்டு, வெளிநாட்டு விமான போக்குவரத்துக்கும் இந்த தடை பொருந்தும். ஆட்டோ, டாக்சிகள் ஓடவும் அனுமதி இல்லை.

* கல்வி நிறுவனங்களும், பயிற்சி மையங்களும் மே 3-ந்தேதி வரை மூடப்பட்டு இருக்கும். என்றாலும் கல்வி நிறுவனங்கள் ஆன்லைன் மூலம் பாடங்களை நடத்தலாம்.

சினிமா தியேட்டர்கள்

* மதுபானம், குட்கா, புகையிலை பொருட்கள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

* அனைத்து சமூக, அரசியல், விளையாட்டு, மத நிகழ்ச்சிகளுக்கு மே 3-ந்தேதி வரை தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. அன்றைய தினம் வரை வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டு இருக்கும்.

* இதேபோல் சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்கள், உடற்பயிற்சி கூடங்கள், விளையாட்டு அரங்கங்கள், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், கலையரங்கங்கள், பார்கள் ஆகியவையும் மூடப்பட்டு இருக்கும்.

* இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் 20 பேருக்கு மேல் கலந்துகொள்ள அனுமதி கிடையாது.

தொழிற்சாலைகள்

* நகராட்சி, மாநகராட்சி எல்லைகளுக்கு அப்பால் ஊரக பகுதிகளில் உள்ள தொழில் நிறுவனங்கள் கடுமையான சமூக விலகல் கட்டுப்பாடுகளை பின்பற்றி வருகிற 20-ந்தேதி முதல் செயல்படலாம்.

* சிறப்பு பொருளாதார மண்டலங்கள், தொழிற்பேட்டை, தொழில் நகரியங்களில் உள்ள தொழில் நிறுவனங்கள் 20-ந்தேதி முதல் இயங்கலாம். தொழிலாளர்கள் தொழிற்சாலைகளிலோ அல்லது அதற்கு அருகில் உள்ள கட்டிடங்களிலோ சமூக விலகலை பின்பற்றி தங்குவதற்கான ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் செய்ய வேண்டும்.

* மருந்து, மருத்துவ சாதனங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் செயல்படலாம்.

* ஊரக பகுதிகளில் உள்ள உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகள், செங்கல் சூளைகள் இயங்கலாம்.

* ஆயுஷ் உள்ளிட்ட சுகாதார சேவைகள் தொடர்ந்து நடைபெறலாம். அதன்படி ஆஸ்பத்திரிகள், கால்நடை மருத்துவமனைகள், மருத்துவ ஆய்வகங்கள், தொலை மருத்துவ சேவைகள் செயல்படலாம்.

மருத்துவ உபகரணங்கள்

* அனைத்து மளிகை கடைகள், பழங்கள் மற்றும் காய்கறி கடைகள், பால் விற்பனை நிலையங்கள், கோழி, இறைச்சி, மீன் கடைகள் திறந்து இருக்கும்.

* மருந்து, மருத்துவ உபகரணங்கள், ஆம்புலன்சுகள் தயாரிக்கும் நிறுவனங்கள் 20-ந்தேதி முதல் தங்கள் பணிகளை தொடங்கலாம்.

* வங்கி கிளைகள், ஏ.டி.எம்.கள் வழக்கம் போல் இயங்கும். வங்கிகளுக்கு உள்ளூர் நிர்வாகம் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

* காப்பீட்டு நிறுவனங்கள், பங்கு பரிவர்த்தனை வாரியம் ஆகியவை செயல்படும்.

மருத்துவ காப்பீடு

* பணியிடங்களில் உடல் வெப்பம் கண்டறிதல், கைகளை சுத்தம் செய்வது போன்ற கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

* ‘லிப்ட்’களில் (மின்தூக்கி) அவற்றின் அளவை பொறுத்து 2 அல்லது 4 பேருக்கு மேல் அனுமதிக்கக்கூடாது. படிகள் வழியாக செல்வதை ஊக்குவிக்கவேண்டும்

* தொழிலாளர்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்குவது கட்டாயம் ஆகும்.

* தொழிற்சாலைகளில் ஷிப்டுகளுக்கு இடையே 1 மணி நேரம் இடைவெளி இருக்க வேண்டும். சமூக விலகலை கட்டுப்படுத்த இது அவசியம்.

வேளாண்மை பணிகள்

* 20-ந்தேதி முதல் வேளாண்மை, தோட்டக்கலை உள்ளிட்ட அனைத்து வேளாண் பணிகளையும் மேற்கொள்ளலாம். அதாவது விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் தங்கள் பணிகளை செய்யலாம். வேளாண் விளை பொருட்களின் கொள்முதலும் மேற்கொள்ளலாம்.

* வேளாண்மை எந்திரங்கள் மற்றும் அது தொடர்பான உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடைகள், பழுதுபார்க்கும் கடைகள் போன்றவற்றை 20-ந்தேதி முதல் திறக்க அனுமதி வழங்கப்படுகிறது.

* ரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லி மருந்து, விதைகள் உற்பத்தி, வினியோகம் மற்றும் சில்லரை விற்பனைக்கு அனுமதிக்கப்படுகிறது.

* பால் உற்பத்தி, பதப்படுத்துதல், வெளியிடங்களுக்கு அனுப்புதல் மற்றும் கால்நடை தீவன உற்பத்திக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

கட்டுமான பணிகள்

* கிராமப்பகுதிகளிலும், தொழிற்பேட்டைகளிலும் சாலைகள், நீர்ப்பாசன திட்டங்கள், கட்டிடங்கள் கட்டுவது போன்ற கட்டுமான பணிகளை மேற்கொள்ளலாம்.

* நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் ஏற்கனவே நடைபெற்ற கட்டுமான திட்டப்பணிகளை தொடர்ந்து மேற்கொள்ளலாம். வெளி இடங்களில் இருந்து ஆட்களை கொண்டு வராமல், வேலை நடைபெறும் இடத்திலேயே வேலையாட்கள் கிடைக்கும் பட்சத்தில் இதற்கு அனுமதி வழங்கப்படுகிறது.

* புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கட்டுமான திட்டங்களையும் தொடங்கலாம்.

ஊரக வேலைவாய்ப்பு திட்டம்

* மீன்பிடித்தல், விற்பனைக்காக வெளியிடங்களுக்கு அனுப்புதல், மீன்வளர்ப்பு போன்ற பணிகளை மேற்கொள்ளலாம்.

* தேயிலை, காபி, ரப்பர் தோட்ட தொழில்கள் அதிகபட்சம் 50 சதவீத தொழிலாளர்களுடன் செயல்படலாம். இதேபோல் அவற்றை பதப்படுத்தி அனுப்பும் பணியிலும் 50 சதவீத தொழிலாளர்கள் ஈடுபடலாம்.

* லாரிகள் பழுதுபார்க்கும் கடைகள், நெடுஞ்சாலைகளில் உள்ள ஓட்டல்கள், அரசு பணிகளுக்கான கால் சென்டர்கள் 20-ந்தேதி முதல் திறந்து இருக்கும்.

* மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணிகளை மேற்கொள்ளலாம். ஆனால் பணியாளர்கள் முக கவசம் அணிந்து, சமூக விலகலை பின்பற்ற வேண்டும்.

சரக்கு போக்குவரத்து

* மாநிலங்களுக்கு இடையே லாரிகளில் உணவு, மருந்து, பெட்ரோலிய பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய சரக்குகளை கொண்டு செல்ல அனுமதி வழங்கப்படுகிறது. ஒவ்வொரு லாரியிலும் தலா 2 டிரைவர்கள் மற்றும் ஒரு உதவியாளர் இருக்க வேண்டும். டிரைவர்கள் கட்டாயம் ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.

* சரக்கு ரெயில்கள் மற்றும் சரக்கு விமானங்களின் போக்குவரத்துக்கும் அனுமதி வழங்கப்படுகிறது.

* துறைமுகங்கள் இயங்குவதோடு, கடல் வழி சரக்கு போக்குவரத்தும் நடைபெறும். சரக்கு பெட்டக முனையங்களும் செயல்படும்.

* எண்ணெய் மற்றும் எரிவாயு திட்ட பணிகள், தபால், தொலைத்தொடர்பு சேவைகள் நடைபெறும்.

* அச்சு, மின்னணு ஊடகங்கள், கேபிள் சேவைகள் தொடர்ந்து நடைபெறும்.

* தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் செயல்பட அனுமதி.

* கூரியர் சேவை, ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள், சேமிப்பு கிடங்குகள், தனியார் பாதுகாப்பு சேவை நிறுவனங்கள் செயல்படலாம்.

தச்சுத்தொழிலாளர்கள்

* எலெக்ட்ரீஷியன், கம்ப்யூட்டர் பழுதுபார்ப்போர், மோட்டார் பழுதுபார்ப்போர், தச்சுத்தொழிலாளர்கள், பிளம்பர்கள் 20-ந்தேதி முதல் தங்கள் பணிகளை செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

* ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகள் இல்லங்களும், மனநல காப்பகங்களும், அங்கன்வாடிகளும் செயல்படும்.

* ஊரடங்கின் காரணமாக பாதிக்கப்பட்ட சுற்றுலா பயணிகள் தங்கி இருக்கும் ஓட்டல்கள், விடுதிகள் செயல்படலாம்.

* 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், சிகிச்சை தேவைப்படும் நிலையில் இருப்பவர்கள், 5 வயதுக்கு குறைவான குழந்தைகள் உள்ள பெற்றோர்களை வீடுகளில் இருந்து பணியாற்ற அனுமதிக்கலாம்.

* மக்களிடையே பீதியை ஏற்படுத்தும் வகையில் வதந்திகளை பரப்புவோருக்கு ஓர் ஆண்டு வரை சிறை தண்டனையோ அல்லது அபராதத்துடன் கூடிய சிறை தண்டனையோ விதிக்கப்படும்.

மாநில அரசுகள்

* ஊரடங்கால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை குறைக்கும் வகையில் மேற்கண்ட பணிகளுக்கு 20-ந்தேதி முதல் விலக்கு அளிக்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட மாநில, யூனியன் பிரதேச அரசுகளும், மாவட்ட நிர்வாகங்களும் ஊரடங்கு தொடர்பாக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் மற்றும் வழிமுறைகளை பின்பற்றி இதை செயல்படுத்த வேண்டும்.

* கொரோனா பாதிப்பு தீவிரமாக உள்ள பகுதிகள் (‘ஹாட் ஸ்பாட்’) எவை என்பதை மாநில, யூனியன் பிரதேச மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் கண்டறிந்து வரையறுக்க வேண்டும். அந்த பகுதிகளுக்கு தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்த விதிவிலக்குகள் பொருந்தாது. அதாவது அந்த பகுதிகளில் பணிகளை மேற்கொள்ள அனுமதி கிடையாது. அந்த பகுதிகளில் மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளை மட்டும் மாநில, யூனியன் பிரதேச அரசுகள் அனுமதிப்பதோடு, மக்கள் நடமாட்டத்தையும் கட்டுப்படுத்தி சட்டம்-ஒழுங்கை பராமரிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story