ராஜஸ்தானில் சிக்கியுள்ள மாணவர்களை மீட்க 300 பேருந்துகளை அனுப்பியது உ.பி அரசு


ராஜஸ்தானில் சிக்கியுள்ள மாணவர்களை மீட்க 300 பேருந்துகளை அனுப்பியது உ.பி அரசு
x
தினத்தந்தி 17 April 2020 3:33 PM GMT (Updated: 2020-04-17T21:03:56+05:30)

ஊரடங்கால் ராஜஸ்தானில் சிக்கியுள்ள தங்கள் மாநில மாணவர்களை மீட்க உத்தர பிரதேச அரசு 300 பேருந்துகளை அனுப்பி வைத்துள்ளது.

லக்னோ,

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கால்,  வெளிமாநிலங்களுக்குப் பணி, மற்றும் கல்வி நிமித்தமாகச் சென்றவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த நிலையில்,  ராஜஸ்தானில் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்காகப் பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கும் தனது மாநில மாணவர்களை மீட்பதற்காக, உத்தரப்பிரதேச அரசு 300 பேருந்துகளை அனுப்பி வைத்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா மாவட்டத்தில் பிரபல போட்டித் தேர்வு மையங்கள் இயங்கி வருகின்றன. இதேபோன்று பொறியியல் மற்றும் மருத்துவ நுழைவுத் தேர்வு பயிற்சிக்கும் கோட்டாவில் உள்ள பயிற்சி மையங்கள் பெயர்பெற்றுள்ளன. அங்கு, உத்தர பிரதேசத்தை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் தங்கிப் பயின்று வந்தனர். தற்போது ஊரடங்கால் அவர்கள் மாநிலம் திரும்ப முடியாததால், உத்தர பிரதேச அரசு பேருந்துகளை அனுப்பியுள்ளது. 

இதுகுறித்து டுவிட்டரில்ல் பதிவிட்டுள்ள ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், 'மாணவர்களை மீட்டுச் செல்ல உத்தரப்பிரதேச அரசு பேருந்துகளை அனுப்பி வைத்துள்ளது. இதேபோன்று மற்ற மாநிலங்களும், அவர்களது மாணவர்களைக் கொண்டு செல்லலாம்.' என்று தெரிவித்துள்ளார். இதற்கிடையே உத்தரப்பிரதேச அரசின் நடவடிக்கை ஊரடங்கு விதிகளுக்கு  எதிரானது என்று பீகார் முதல்வர் நிதிஷ் குமார் கூறியுள்ளார். 


Next Story