இதயமற்ற அரசு மட்டுமே மக்களுக்கு ஒன்றும் செய்யாது;மத்திய அரசு மீது ப.சிதம்பரம் பாய்ச்சல்


இதயமற்ற அரசு மட்டுமே மக்களுக்கு ஒன்றும் செய்யாது;மத்திய அரசு மீது ப.சிதம்பரம் பாய்ச்சல்
x
தினத்தந்தி 19 April 2020 9:47 AM GMT (Updated: 19 April 2020 9:47 AM GMT)

இதயமற்ற அரசு மட்டுமே மக்களுக்கு ஒன்றும் செய்யாது என்று மத்திய அரசு மீது ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.

புதுடெல்லி,

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக ஏழைகள்,  புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில்  டுவிட்டரில் ப.சிதம்பரம் இன்று பதிவிட்ட கருத்தில்  கூறியிருப்பதாவது;- “ ஏழை மக்கள் கைகளில் பணம் இல்லாமல், உணவுக்கு வழியில்லாமல் இலவசமாகக் கிடைக்கும் சமைக்கப்பட்ட உணவுகளை வாங்குவதற்காக நாள்தோறும் வரிசையில் நிற்பதைக் காண முடிகிறது. இதுபோன்ற ஏராளமான சம்பவங்கள் நடக்கின்றன. இதயமற்ற அரசுதான் மக்களுக்கு எந்தவிதமான உதவியும் செய்யாது. ஒவ்வொரு ஏழைக் குடும்பத்துக்கும் பணத்தைப் பரிமாற்றம் செய்து அவர்களின் மதிப்பைப் பாதுகாத்து அவர்களைப் பட்டினியிலிருந்து அரசால் பாதுகாக்க முடியாதா?

இந்திய உணவுக் கழகத்தில் 7.7 கோடி டன் உணவு தானியங்கள் இருப்பு இருக்கிறதே? அதில் சிறிது அளவு எடுத்து தேவைப்படும் ஏழைக் குடும்பங்களுக்கு இலவசமாக அரசாங்கத்தால் ஏன் வழங்க முடியாது? நான் எழுப்பிய இந்த இரு கேள்விகளும் பொருளாதாரம், மற்றும் தார்மீக கேள்விகள். நரேந்திர மோடி, நிர்மலா சீதாராமன் இருவரும் இந்தக் கேள்விக்குப் பதில் அளிப்பதிலிருந்து தோல்வி அடைந்துவிட்டார்கள்” என்று தெரிவித்துள்ளார்.


Next Story