கொரோனாவில் இருந்து முழு அளவில் விடுபட்டது மணிப்பூர்; முதல் மந்திரி மகிழ்ச்சி


கொரோனாவில் இருந்து முழு அளவில் விடுபட்டது மணிப்பூர்; முதல் மந்திரி மகிழ்ச்சி
x
தினத்தந்தி 20 April 2020 6:56 AM GMT (Updated: 20 April 2020 6:56 AM GMT)

கொரோனா பாதிப்பில் இருந்து முழு அளவில் மணிப்பூர் விடுபட்டு உள்ளது என முதல் மந்திரி பைரன் சிங் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளார்.

இம்பால்,

நாடு முழுவதும் கொரோனா பாதிப்புக்கு 32 மாநிலங்கள் இலக்காகி உள்ளன.  கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ளது.  சில பகுதிகளில் இன்று முதல் தளர்வுகள் அறிவிக்கப்படும் என கூறப்பட்டது.  இவற்றில் கேரளாவில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.  எனினும், இந்த தளர்வுகளால் கொரேனா தடுப்பு நடவடிக்கை பாதிப்படையும் என மத்திய உள்துறை அமைச்சகம் வேதனை தெரிவித்து உள்ளது.

கொரோனா பாதிப்பில் மராட்டியம் முதல் இடத்தில் உள்ளது.  மராட்டியத்தில் 4,203 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.  இதுவரை 507 பேர் குணமடைந்து உள்ளனர்.  223 பேர் பலியாகி உள்ளனர்.

நாட்டில் மிக குறைந்த அளவாக, மணிப்பூரில் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.  அவர்கள் 2 பேரும் தொடர்ந்து கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.  இதில் ஒருவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.  மற்றொருவருக்கு கண்காணிப்பு தொடர்ந்தது.

இந்நிலையில், மணிப்பூர் முதல் மந்திரி என். பைரன் சிங் சமூக வலைதளத்தில் வெளியிட்டு உள்ள செய்தியில், கொரோனா பாதிப்பில் இருந்து முழு அளவில் மணிப்பூர் விடுபட்டு உள்ளது என்ற தகவலை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

சிகிச்சை பெற்ற 2 நோயாளிகளும் முழு அளவில் மீண்டு உள்ளனர்.  அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என பரிசோதனை முடிவில் தெரிய வந்துள்ளது.  மணிப்பூரில் புதிய பாதிப்புகள் எதுவும் இல்லை.  மக்கள் ஒத்துழைப்பு, மருத்துவ பணியாளர் மற்றும் ஊரடங்க நடவடிக்கைகளால் இது சாத்தியப்பட்டது என தெரிவித்து உள்ளார்.  இதனால் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மணிப்பூர் முழுவதும் மீண்டுள்ளது.

Next Story