2 ஆண்டுகளாக புற்றுநோயுடன் போராடிய பிரபல இந்தி நடிகர் ரிஷி கபூர் மரணம் - பிரதமர் மோடி இரங்கல்


2 ஆண்டுகளாக புற்றுநோயுடன் போராடிய பிரபல இந்தி நடிகர் ரிஷி கபூர் மரணம் - பிரதமர் மோடி இரங்கல்
x
தினத்தந்தி 1 May 2020 5:15 AM IST (Updated: 1 May 2020 5:08 AM IST)
t-max-icont-min-icon

2 ஆண்டுகளாக புற்றுநோயுடன் போராடிய பிரபல இந்தி நடிகர் ரிஷி கபூர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 67. அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

மும்பை, 

பிரபல இந்தி நடிகரான ரிஷி கபூர், ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதற்காக அவர் 2018-ம் ஆண்டு அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்றார். சிகிச்சை முடிந்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம்தான் மும்பை திரும்பினார். ரிஷி கபூர் அமெரிக்காவில் சிகிச்சை பெற்றபோது ஷாருக்கான், ஆலியா பட், அமீர்கான், பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோனே, அனுபம்கெர், ஐஸ்வர்யா ராய் போன்ற பிரபல சினிமா நட்சத்திரங்கள் நேரில் சென்று நலம் விசாரித்து இருந்தனர்.

ரிஷி கபூர் மரணம்

மும்பை திரும்பிய பிறகும் ரிஷி கபூர் வீட்டில் தங்கி இருந்தபடி புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் திடீரென அவரது உடல் நிலை மோசம் அடைந்தது. இதனால் உடனடியாக அவர் மும்பையில் உள்ள எச்.என். ரிலையன்ஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆயினும் சிகிச்சை பலன் அளிக்காமல் ரிஷி கபூர் நேற்று காலை 8.45 மணியளவில் உயிர் இழந்தார். புற்றுநோயுடன் சுமார் 2 ஆண்டுகளாக போராடிய அவர் இறுதியில் மரணத்தை தழுவினார்.

ரிஷி கபூர், புகழ்பெற்ற நடிகரும் இயக்குனருமான மறைந்த ராஜ்கபூரின் மகன் ஆவார். மும்பை செம்பூரில் பிறந்த ரிஷிகபூர், தந்தையின் ‘ஸ்ரீ 420’ என்ற படத்தில் வரும் ஒரு பாடலில் குழந்தையாக திரையில் தோன்றினார். இதையடுத்து 1970-ம் ஆண்டு வெளியான ‘மேரா நாம் ஜோக்கர்’ என்ற படத்தில் நடித்தார். முதல் படத்திலேயே சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதை பெற்றார்.

காதல் மன்னன்

இதைத்தொடர்ந்து 1973-ம் ஆண்டு வெளியான ‘பாபி’ என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகம் ஆனார். இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்ட காதல் படமான ‘பாபி’ மிகப்பெரிய வெற்றியை பெற்றது. மேலும் அவருக்கு சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதை பெற்றுக்கொடுத்தது. இதையடுத்து அவர் இந்தி சினிமாவில் 30 ஆண்டுகளுக்கு காதல் மன்னனாக வலம் வந்தார்.

இவர் நடிப்பில் வெளியான லைலா மஜ்னு, கேல் கேல் மெயின், ‘கபி, கபி’, அமர் அக்பர் ஆண்டனி, கர்ஸ், சாந்தினி போன்ற மெகாஹிட் காதல் படங்கள் குறிப்பிடத்தக்கவை. 1990-களுக்கு பிறகு ரிஷி கபூர் குணச்சித்திர வேடங்களில் நடித்து முத்திரை பதித்தார். கபூர் அன்ட் சன்ஸ் என்ற படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான பிலிம்போ் விருதையும் பெற்று இருந்தார். கடைசியாக அவர் ‘தி பாடி’ என்ற படத்தில் நடித்தார்.

உடல் தகனம்

நடிகர் ரிஷி கபூருக்கு நீத்து சிங் என்ற மனைவி உள்ளார். பிரபல இந்தி நடிகர் ரன்பீர் சிங் இவரது மகன் ஆவார். மேலும் இவருக்கு ரித்திமா என்ற மகள் உள்ளார். டெல்லியில் வசித்து வரும் ரித்திமா, தந்தையின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்வதற்காக மும்பை செல்ல டெல்லி போலீசார் அனுமதி அளித்தனர். இதையடுத்து அவர் காரில் மும்பை விரைந்தார்.

கொரோனாவின் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதால், ரிஷி கபூரின் உடல் வீட்டுக்கு கொண்டு செல்லப்படவில்லை. ஆஸ்பத்திரியில் இருந்து நேராக தெற்கு மும்பையில் உள்ள சந்தன்வாடி மயானத்துக்கு நேற்று பிற்பகல் 3.45 மணிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு ரிஷி கபூரின் உடல் தகனம் செய்யப்பட்டது.

ரிஷி கபூரின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் அவரது குடும்பத்தினர் மற்றும் நடிகர் அபிஷேக் பச்சன் உள்ளிட்ட சில முக்கிய பிரமுகர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். மகள் ரித்திமா மும்பை வருவதற்கு முன்பே ரிஷி கபூர் இறுதிச்சடங்கு முடிந்துவிட்டது.

பிரதமர் இரங்கல்

நடிகர் ரிஷிகபூரின் மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மராட்டிய கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி, முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “பன்முகத்தன்மை கொண்ட, அன்பானவர், கலகலப்பானவர். அவர் தான் ரிஷிகபூர். அவர் திறமையின் சக்திமையமாக திகழ்ந்தார். சமூக வலைத்தளத்தில் கூட நாங்கள் பேசி கொண்டதை எப்போதும் நினைத்து பார்ப்பேன். நாட்டின் வளர்ச்சி, சினிமாவை பற்றி மட்டுமே நினைத்துக்கொண்டு இருந்தார். அவரது மரணத்தால் கலங்கிபோய் உள்ளேன். அவரது குடும்பத்தினர், ரசிகர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். அவரது ஆத்மா சாந்தி அடையட்டும்” என கூறியுள்ளார்.

முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “ரிஷி கபூரின் மறைவால் 2 தலைமுறை கலைஞர்களுக்கான தொடர்பை இழந்து உள்ளோம். ரிஷி கபூர் நல்ல நடிகர் மட்டுமல்ல. மனதில் தோன்றுவதை வெளிப்படையாக பேசுபவர்” என கூறி உள்ளார்.

ரஜினிகாந்த்

1986-ம் ஆண்டு ரிஷி கபூருடன் ‘தோஸ்தி துஷ்மனி’ என்ற படத்தில் நடிகர் ரஜினிகாந்த் இணைந்து நடித்து உள்ளார். ரிஷிகபூரின் மறைவு குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “இதயமே நொறுங்கிவிட்டது. அவரது ஆத்மா சாந்தி அடையட்டும். என் நெருங்கிய நண்பன் ரிஷிகபூர்” என கூறி உள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘ரிஷி கபூர் மறைவை என்னால் நம்பமுடியவில்லை. அவர் எப்போதும் புன்னகையை தயாராக வைத்து இருப்பார். எங்கள் இருவருக்குள்ளும் பரஸ்பரம் அன்பும் மரியாதையும் வைத்து இருந்தோம். எனது நண்பரை இழந்து விட்டேன். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்’ என்று தெரிவித்து உள்ளார்.

அமிதாப்பச்சன்

இதேபோல் நடிகர்கள் அமிதாப் பச்சன், அக்‌ஷய்குமார், அஜய் தேவ்கன், சல்மான்கான், அமீர்கான், பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கர், இயக்குனர் கரன் ஜோகர், நடிகை டாப்சி, நடிகர்கள் ராதாரவி, சிரஞ்சீவி, மகேஷ்பாபு, நடிகை மஞ்சு வாரியர், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் உள்பட பலர் இரங்கல் தெரிவித்து உள்ளனர். பல இந்திய திரை நட்சத்திரங்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

நேற்று முன்தினம் நடிகர் இர்பான் கான் மரணம் அடைந்த நிலையில், அடுத்த நாளே பழம்பெரும் நடிகர் ரிஷி கபூரின் மறைவு இந்திய சினிமா நட்சத்திரங்கள் மற்றும் ரசிகா்கள் இடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story