டெல்லியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் 135 பேருக்கு கொரோனா: பரிசோதனை முடிவுக்கு மேலும் பலர் காத்திருப்பு


டெல்லியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் 135 பேருக்கு கொரோனா: பரிசோதனை முடிவுக்கு மேலும் பலர் காத்திருப்பு
x
தினத்தந்தி 3 May 2020 4:30 AM IST (Updated: 3 May 2020 4:27 AM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் 135 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இன்னும் பலருக்கு பரிசோதனை முடிவு வரவேண்டியதிருக்கிறது.

புதுடெல்லி, 

டெல்லியில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இந்தநிலையில் அங்கு மயூர்விகார் பிரிவு-3-ல், இயங்கி வந்த மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் 31-வது பிரிவினரையும் கொரோனா வைரஸ் தொற்று விட்டு வைக்கவில்லை.இந்த படை பிரிவினர் 135 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்காரணமாக அந்த பகுதி மூடி ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது.

இன்னும் 100-க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை முடிவு வர வேண்டியதிருக்கிறது என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஏற்கனவே கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் பெரும்பாலோருக்கு அறிகுறிகள் ஏதுமில்லை என தகவல்கள் கூறுகின்றன.

பாதிப்புக்குள்ளான ரிசர்வ் போலீஸ் படையினர் மண்டோலியில் உள்ள டெல்லி அரசாங்கத்தின் தனிமைப்படுத்தும் முகாமில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் டெல்லியில் ரிசர்வ் போலீஸ் படையினர் 12 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டதும், இந்த வாரத்தின் தொடக்கத்தில் 55 வயதான சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் கொரோனாவுக்கு பலியானதும் நினைவு கூரத்தக்து.

இந்த படையில், விடுமுறையில் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் உள்ள தனது வீட்டுக்கு சென்று திரும்பிய ஒரு போலீஸ்காரர்தான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். அவர் மூலமாகத்தான் மற்றவர்களுக்கு பரவி இருப்பதாக தெரிகிறது.

நாட்டின் மிகப்பெரிய துணை ராணுவமான மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் 135 பேருக்கு கொரோனா வைரஸ்தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 1,000 பேரை கொண்ட படைப்பிரிவில் 135 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டிருப்பது மற்றவர்களுக்கு எச்சரிக்கை மணி அடிப்பதாகவும் அமைந்துள்ளது.

விடுமுறையில் சென்று திரும்புகிற படை வீரர்கள் மற்றும் வீரர்கள் யாருக்கேனும் கொரோனா அறிகுறி குறித்த சந்தேகம் இருந்தால் 14 நாட்கள் தனிமைப்படுத்தும் நடைமுறை மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் இருந்து வருகிறது.

ஆனால் தனிமைப்படுத்தி 5 நட்களுக்கு பிறகு அறிகுறிகள் எதுவும் இல்லை என்றால் டாக்டர்களும், மருத்துவ சார்பு பணியாளர்களும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவித்துக்கொள்ளலாம் என சமீபத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் மருத்துவ பிரிவு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

Next Story