கொரோனா வைரசால் விவசாயத்தில் பாதிப்பு இல்லை - பிரதமர் மோடி நடத்திய கூட்டத்தில் தகவல்


கொரோனா வைரசால் விவசாயத்தில் பாதிப்பு இல்லை - பிரதமர் மோடி நடத்திய கூட்டத்தில் தகவல்
x
தினத்தந்தி 3 May 2020 4:45 AM IST (Updated: 3 May 2020 4:42 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா வைரசால் விவசாயத்தில் பாதிப்பு இல்லை என்று பிரதமர் மோடி நடத்திய கூட்டத்தில் தகவல் வெளியானது.

புதுடெல்லி, 

நமது நாட்டின் முதுகெலும்பாக விவசாயத்துறை திகழ்கிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயம் 15 சதவீத பங்களிப்பு செய்கிறது. 130 கோடி மக்களில் பாதிக்கும் அதிகமானோர் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதனால்தான் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவதை தடுக்கிற விதத்தில் ஊரடங்கு உள்ளிட்ட பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தாலும்கூட, அரசாங்கம் பராமரித்து வருவதால் விவசாயத்துறை சீராக இயங்கி வருகிறது.

விவசாயத்தில் பாதிப்பு இல்லை

இந்த நிலையில் விவசாயத்துறையில் செய்ய வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி, உயர் அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது விவாதிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து அரசு தரப்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறி உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* கொரோனா வைரஸ் பரவி அதை தடுக்க நடவடிக்கைகள் எடுத்து வருகிறபோதும், அது நடப்பு நிதி ஆண்டில் பிற துறைகளில் பாதிப்பை ஏற்படுத்துவதுபோல, விவசாய துறையில் பாதிப்பை ஏற்படுத்தாது என தெரிவிக்கப்பட்டது.

* பயிர்களில் உயிர்தொழில்நுட்ப வளர்ச்சிகளின் நன்மை-தீமைகள், பயிர்களின் உற்பத்தி திறனை மேம்படுத்துதல், சாகுபடி செலவினை குறைத்தல் பற்றி விவாதிக்கப்பட்டது.

* தற்போதைய சந்தைப்படுத்துதல் சூழ்நிலையில், மேற்கொள்ள வேண்டிய தலையீடுகள் பற்றி ஆலோசனையின் போது பேசப்பட்டது.

சீர்திருத்தங்கள் கொண்டு வருதல்

* விரைவான விவசாய வளர்ச்சியின் பின்னணியில் பொருத்தமான சீர்திருத்தங்களை கொண்டு வருவது பற்றியும், விவசாய உள்கட்டமைப்புகளை வலுப்படுத்துவதற்கு சலுகை கடன் அளித்தல் குறித்தும், பிரதம மந்திரி கிசான் திட்டத்தின் பயனாளிகளுக்கு சிறப்பு கிசான் கடன் அட்டை வழங்குவது பற்றியும் விவாதிக்கப்பட்டது.

* விவசாய உற்பத்தி பொருட்களை ஆன்லைன் வழியாக விற்பனை செய்வது பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.

* விவசாய சாகுபடியில் புதிய முறையை புகுத்தும் வகையிலும், மூலதனத்தையும், தொழில்நுட்பத்தையும் கொண்டுவரும் வகையிலும் நாட்டில் ஒரே சீரான சட்ட ரீதியான கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி பேசப்பட்டது.

விவசாயிகளின் நலன்களை பாதுகாத்தல்

* 2016-ம் ஆண்டு இயற்றிய மாதிரி விவசாய நில குத்தகை சட்டத்தின் முன் உள்ள சவால்கள், சிறு மற்றும் குறு விவசாயிகளின் நலன்களை எவ்வாறு பாதுகாப்பது என்பது பற்றியும் விரிவாக விவாதிக்கப்பட்டது.

* அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தை தற்போதைய காலத்துக்கு ஏற்ப மாற்றுவதற்கான வழிகள், உற்பத்திக்கு பிந்தைய விவசாய உள்கட்டமைப்பில் பெரிய அளவில் தனியார் முதலீடுகளை ஊக்கப்படுத்துதல் பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.

* பிராண்ட் இந்தியா உருவாக்கம், பொருட்களுக்கான குறிப்பிட்ட வாரியங்கள், கவுன்சில்களை மேம்படுத்துதல், ஒப்பந்த சாகுபடி செய்தல், விவசாய பொருட்கள் ஏற்றுமதியை அதிகரிக்க திட்டமிடுதல் பற்றியும் விவாதிக்கப்பட்டது.

* கடைசி மைல்வரை தொழில்நுட்பத்தை பரப்பி, உலகளவிலான சந்தையில் விவசாயிகளின் போட்டியிடும் திறனையும், பங்கையும் மேம்படுத்த வேண்டியதின் அவசியத்தை பிரதமர் மோடி வலியுறுத்தினார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story