புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த கட்டிடம் மீது கார் மோதியது; மலையாள நடிகர் உள்பட 3 பேர் பலி


புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த கட்டிடம் மீது கார் மோதியது; மலையாள நடிகர் உள்பட 3 பேர் பலி
x
தினத்தந்தி 5 May 2020 4:10 AM IST (Updated: 5 May 2020 4:10 AM IST)
t-max-icont-min-icon

புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த கட்டிடத்தின் மீது கார் பயங்கரமாக மோதியதில் கேரள இளம் நடிகர் உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் தொழிலாளர்கள் 3 பேர் காயம் அடைந்தனர்.

திருவனந்தபுரம், 

கொரோனா பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், பல்வேறு மாநிலங்களில் சிக்கியுள்ள வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் அவதி அடைந்து வந்தனர். இந்த நிலையில் மத்திய அரசின் உத்தரவால் அவர்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பி வருகின்றனர். ஆனாலும் பல மாநிலங்களில் அவர்கள் இன்னும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அந்த வகையில் கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள மூவாற்றுப்புழாவை அடுத்த மெக்கடம்பு என்ற இடத்தில் ஒரு கட்டிடத்தில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இந்தநிலையில் நேற்றுமுன்தினம் இரவு அந்த வழியாக வந்த கார் ஒன்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியதுடன், புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த கட்டிடத்தின் மீது பயங்கரமாக மோதியது.

இதில் காரின் முன்பகுதி அப்பளம்போல நொறுங்கியது. இந்த விபத்தில் காரில் இருந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் கட்டிடத்தில் தங்கி இருந்த தொழிலாளர்கள் 3 பேர் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், பலியானவர்களில் ஒருவர் மெக்கடம்பு பகுதியை சேர்ந்த இளம் மலையாள நடிகர் பாசில் ஜார்ஜ் (வயது 30) என்பதும், மற்ற இருவரும் வாலகம் பகுதியை சேர்ந்த நிதின் பாபு(35), அஸ்வின் ஜாய்(29) என்பதும் தெரியவந்தது. கடந்த ஆண்டு வெளிவந்த ‘பூவல்லியம் குஞ்சாதம்’ என்ற படத்தில் பாசில் ஜார்ஜ் கதாநாயகனாக நடித்து இருந்தார். கார் விபத்தில் இளம் நடிகர் பலியான சம்பவம் அவருடைய ரசிகர்களையும், கேரள திரையுலகினரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

Next Story