இந்தியர்களை மீட்டு அழைத்து வர மாலத்தீவு, துபாய்க்கு கடற்படை கப்பல்கள் விரைந்தன
இந்தியர்களை மீட்டு அழைத்து வருவதற்காக மாலத்தீவு, துபாய்க்கு இந்திய கடற்படை கப்பல்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.
கொச்சி,
கொரோனா பாதிப்பின் காரணமாக ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்கா, மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்டு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தொடங்கி உள்ளது. இந்த பணி 7-ந் தேதி (நாளை) தொடங்கும் என்று அறிவித்துள்ள அரசு, இதற்காக பல்வேறு விதிமுறைகளையும் அறிவித்து இருக்கிறது.
தாய்நாடு திரும்புவதற்காக வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் அங்குள்ள இந்திய தூதரகங்களில் தங்கள் பெயர்களை பதிவு செய்து வருகிறார்கள். பரிசோதனைக்கு பின்னர் கொரோனா அறிகுறி இல்லாதவர்கள் மட்டும் அழைத்து வரப்பட உள்ளனர்.
மாலத்தீவில் உள்ள இந்தியர்களை திரும்ப அழைத்து வருவதற்காக மும்பையில் இருந்து இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ் ஜலஷ்வா, ஐ.என்.எஸ்.மாகர் என்ற இரு கப்பல்கள் அந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கின்றன. இதேபோல் ஐ.என்.எஸ்.ஷர்துல் என்ற கப்பல் துபாய்க்கு விரைந்து உள்ளது.
இந்த கப்பல்கள் அந்த நாடுகளில் இருந்து இந்தியர்களை ஏற்றிக்கொண்டு கேரள மாநிலம் கொச்சி துறைமுகம் வந்து சேரும் என்று கொச்சியில் ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதேபோல் அபுதாபியில் இருந்து ஒரு விமானமும், துபாயில் இருந்து ஒரு விமானமும் இந்தியர்களை ஏற்றிக் கொண்டு இந்தியா வர இருப்பதாக அங்குள்ள இந்திய தூதரகங்கள் தெரிவித்து உள்ளன. பயணிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அதில் முதியவர்கள், கர்ப்பிணிகள், மருத்துவ சிகிச்சை தேவைப்படுபவர்கள், அவசரகால பணியில் ஈடுபடுவோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும், பயணிகள் பட்டியல் தயாரிக்கப்பட்ட பின்புதான் அவர்களுக்கு டிக்கெட் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சுமார் 2 லட்சம் இந்தியர்கள் அங்கிருந்து தாய்நாடு திரும்ப விருப்பம் தெரிவித்து தங்கள் பெயர்களை பதிவு செய்து இருக்கிறார்கள்.
இதேபோல் அமெரிக்காவில் இருந்து இந்தியர்களை அழைத்து வருவதற்காக சான்பிரான்சிஸ்கோ, நியூயார்க், வாஷிங்டன், சிகாகோ நகரங்களுக்கும் விமானங்கள் அனுப்பப்படுகின்றன. சான்பிரான்சிஸ்கோவுக்கு இந்த வாரத்தில் விமானம் அனுப்பப்படலாம் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகங்கள் பயணிகள் பட்டியலை தயாரிக்கும் பணியை தொடங்கி உள்ளன.
Related Tags :
Next Story