‘ஆரோக்கிய சேது’ செயலியை 9 கோடி பேர் பதிவிறக்கம் - மத்திய அரசு தகவல்
ஸ்மார்ட்போனில் ‘ஆரோக்கிய சேது’ செயலியை 9 கோடிபேர் பதிவிறக்கம் செய்துள்ளனர். அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் அந்த செயலியை பதிவிறக்கம் செய்வது கட்டாயம் என்று மத்திய அரசு கூறியுள்ளது.
புதுடெல்லி,
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக, ‘ஆரோக்கிய சேது’ செயலி உருவாக்கப்பட்டுள்ளது. தனக்கு அருகில் இருக்கும் யாராவது தொற்று பாதிக்கப்பட்டவராக இருந்தால், இந்த செயலி அதை உணர்த்தி விடும். ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டால், அவருடன் தொடர்பு கொண்டவர்களையும் கண்டறிய பயன்படும்.
இதை பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து, குறுகிய காலத்தில் 7 கோடியே 50 லட்சம்பேர் இந்த செயலியை பதிவிறக்கம் செய்தனர்.
அடுத்தடுத்த நாட்களில் ஏராளமானோர் பதிவிறக்கம் செய்ய தொடங்கினர். தற்போது, 9 கோடிபேர் பதிவிறக்கம் செய்துள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷவர்தன் தலைமையிலான மந்திரிகள் குழு கூட்டம் நடைபெற்றது. அதில், ஆரோக்கிய சேது செயலியின் செயல்பாடு, தாக்கம், பயன்கள் ஆகியவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
மக்கள் தங்கள் உடல்நிலை பற்றி இச்செயலியில் தெரிவிப்பதால், பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் கண்டறிந்து உதவ முடிவதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
அலுவலகத்துக்கு வரும் அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் அனைவரும் இந்த செயலியை பதிவிறக்கம் செய்வது கட்டாயம் என்று கூட்டத்தில் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆரோக்கிய சேது பயன்பாட்டை சாதாரண தொலைபேசி வைத்திருப்பவர்களுக்கும் அளிக்க ஒரு திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. ஐ.வி.ஆர்.எஸ். எனப்படும் குரல் வழி சேவை மூலம் சாதாரண தொலைபேசியில் மாநில மொழிகளில் இச்சேவையை பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே, ஆரோக்கிய சேது செயலி, மிகவும் பாதுகாப்பானது, மற்ற நாடுகளிலும் இதேபோன்ற செயலி பயன்படுத்தப்படுகிறது என்று மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story