மதுபானங்களை ‘ஆன்லைன்’ மூலம் விற்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் - மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு அறிவுரை


மதுபானங்களை ‘ஆன்லைன்’ மூலம் விற்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் - மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு அறிவுரை
x
தினத்தந்தி 8 May 2020 11:45 PM GMT (Updated: 8 May 2020 10:20 PM GMT)

மதுபானக் கடைகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்க ‘ஆன்லைன்’ வழியாக மதுபான விற்பனைக்கு ஏற்பாடு செய்து, வீட்டு முகவரிக்கு அவற்றை வினியோகிப்பது குறித்து பரிசீலிக்குமாறு சுப்ரீம் கோர்ட்டு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தி உள்ளது.

புதுடெல்லி, 

ஊரடங்கு காலத்தில் மதுபானங்களை நேரடியாக கடைகள் மூலம் விற்பனை செய்வதன் மூலம், மக்களுக்கு கொரோனா நோய்த்தொற்று அதிகமாக பரவுவதற்கு வாய்ப்புகள் உள்ளது என்பதால், ஊரடங்கு காலத்தில் நேரடி மது விற்பனை செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

நீதிபதிகள் அசோக் பூஷண், சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் பி.ஆர்.கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை காணொலி காட்சி மூலம் விசாரித்தது.

மனுதாரர் குருசாமி நடராஜ் தரப்பில் ஆஜரான வக்கீல் தீபக் சாயி, ‘நாடு முழுவதும் சுமார் 70 ஆயிரம் மதுக்கடைகளில் இதுவரை 5 கோடி மக்கள் மதுவை நேரடியாக வாங்கி இருக்கிறார்கள். மது விற்பனை செய்யும் கடைகளில் சமூக இடைவெளி கடைப்பிடிக்காததால் கொரோனா வைரஸ் பரவுதல் அதிகரித்து உள்ளது.

இது ஊரடங்கு நடை முறையை தோல்வி அடையச்செய்கிறது. எனவே மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்கனவே இது தொடர்பாக வெளியிட்ட நெறிமுறைக்கும், கடைகளில் மது விற்பனைக் கும் தடை விதிக்க வேண்டும்’ என்று வாதிட்டார்.

இதற்கு நீதிபதிகள், “இதன் மீது நாங்கள் எந்தவொரு உத்தரவையும் பிறப்பிக்க மாட்டோம். ஆனால் கொரோனா தொற்றை கருத்தில்கொண்டு, சமுக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் மாநில அரசுகள் மதுபானங்களை வீட்டு வினியோகம் செய்வது அல்லது ஆன்லைன் வழியாக விற்பனைக்கு ஏற்பாடு செய்வது குறித்து பரிசீலிக்க வேண்டும்” என்று கூறினார்கள்.

Next Story