தள்ளி வைக்கப்பட்ட சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வு ஜூலை 1-ந் தேதி தொடங்குகிறது - மத்திய மந்திரி ரமேஷ் பொக்ரியால் அறிவிப்பு


தள்ளி வைக்கப்பட்ட சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வு ஜூலை 1-ந் தேதி தொடங்குகிறது - மத்திய மந்திரி ரமேஷ் பொக்ரியால் அறிவிப்பு
x
தினத்தந்தி 9 May 2020 5:00 AM IST (Updated: 9 May 2020 4:18 AM IST)
t-max-icont-min-icon

தள்ளி வைக்கப்பட்ட சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வு ஜூலை 1-ந் தேதி தொடங்கும் என்று மத்திய மந்திரி ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார்.

புதுடெல்லி, 

சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு, நாட்டின் மற்ற பகுதிகளில் முடிவடைந்தது. ஆனால், குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டம் காரணமாக, வடகிழக்கு டெல்லி பகுதியில் மட்டும் சில பாடங்களுக்கு தேர்வு தள்ளி வைக்கப்பட்டது.

அதுபோல், சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்து கொண்டிருந்தபோது, கடந்த மார்ச் 16-ந் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு, தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டன. அதனால், சில தேர்வுகள் நிலுவையில் உள்ளன.

தள்ளி வைக்கப்பட்ட தேர்வுகளில், உயர்கல்வி சேர்க்கைக்கு அவசியமான 29 பாடங்களுக்கான தேர்வுகளை மட்டும் நடத்துவது என்று கடந்த மாதம் மத்திய அரசு முடிவு செய்தது.

அதன்படி, தள்ளி வைக்கப்பட்ட 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஜூலை 1-ந் தேதி முதல் 15-ந் தேதிவரை நடக்கின்றன.

இதை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி ரமேஷ் பொக்ரியால் நேற்று அறிவித்தார்.தேர்வுக்கான கால அட்டவணை அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இதற்கிடையே விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களின் வீடுகளுக்கே விடைத்தாள்களை அனுப்புவது பற்றியும் சி.பி.எஸ்.இ யோசித்து வருகிறது. இன்னும் இதுகுறித்து இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.

நாடு முழுவதும் உள்ள ஐ.ஐ.டி.களில் சேருவதற்கான ஜே.இ.இ. பிரதான தேர்வு ஜூலை 18-ந் தேதி முதல் 23-ந் தேதிவரை நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜே.இ.இ. அட்வான்ஸ்டு தேர்வு, ஆகஸ்டு 23-ந் தேதி நடைபெறும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி ரமேஷ் பொக்ரியால் நேற்று அறிவித்தார்.

Next Story