கொரோனா பாதிப்பு மேற்கு வங்காளத்துக்கு மத்திய அரசு உதவி செய்யவில்லை - மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு


கொரோனா பாதிப்பு மேற்கு வங்காளத்துக்கு மத்திய அரசு உதவி செய்யவில்லை - மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 14 May 2020 2:00 AM IST (Updated: 14 May 2020 1:14 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா பாதிப்பு விவகாரத்தில் மேற்கு வங்காளத்துக்கு மத்திய அரசு உதவி செய்யவில்லை என்று மம்தா பானர்ஜி குற்றம் சாட்டி உள்ளார்.

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அந்த மாநில அரசு தீவிர நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றும், இதனால் தேசிய சராசரியை விட அங்கு பாதிக்கப்படுபவர்கள் மற்றும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாகவும் மத்திய அரசு குற்றம் சாட்டி உள்ளது. மேலும் கொரோனா பாதிப்பு குறித்து அங்குள்ள சில மாவட்டங்களில் ஆய்வு நடத்த நிபுணர்கள் குழுவை மத்திய அரசு அனுப்பி வைத்தது. இதற்கு அந்த மாநில முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

பிற மாநிலங்களில் உள்ள மேற்கு வங்காள தொழிலாளர்களை அங்கு அனுப்பி வைக்க ரெயில்களை இயக்குவதற்கு மேற்கு வங்காள அரசு ஒத்துழைக்கவில்லை என்று உள்துறை மந்திரி அமித்ஷா குற்றம் சாட்டி இருந்தார். இந்த குற்றச்சாட்டை திரிணாமுல் காங்கிரஸ் மறுத்தது.

இப்படியாக, கொரோனா விவகாரத்தில் மத்திய அரசுக்கும், மேற்கு வங்காள அரசுக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வரும் நிலையில் கடந்த 11-ந் தேதி பிரதமர் மோடி மாநில முதல்-மந்திரிகளுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.

இதில் மம்தா பானர்ஜியும் கலந்து கொண்டு பேசினார். அப்போது, கொரோனாவால் நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டுள்ள இந்த காலகட்டத்தில் பிரதமரும், அனைத்துக் கட்சிகளும் அரசியல் வேறுபாட்டுக்கு இடம் அளிக்கக்கூடாது என்றும், ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டிக் கொண்டிருக்காமல் பரஸ்பரம் உதவ வேண்டும் என்றும், கூட்டாட்சி தத்துவத்தை மேம்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

இந்த நிலை யில், இந்த கூட்டம் பற்றி கருத்து தெரிவித்துள்ள மம்தா பானர்ஜி, பிரதமருடன் நடந்த ஆலோசனை கூட்டத்தின் போது பல்வேறு பிரச்சினைகளை தான் எழுப்பியதாகவும், மேற்கு வங்காளத்துக்கு சட்ட ரீதியாக அளிக்க வேண்டிய நிதி பாக்கியைகூட மத்திய அரசு வழங்கவில்லை என்றும், எனவே எப்போதும் போல் இப்போதும் வெறும்கையுடன்தான் திரும்பி இருப்பதாகவும், மத்திய அரசு உதவி செய்யவில்லை என்றும் கூறி உள்ளார்.

பிற மாநிலங்களில் சிக்கி தவிக்கும் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த தொழிலாளர்களை திரும்ப அழைத்து வருவதற்கு, தனது அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், இதுபற்றி யாரும் கவலைப்பட தேவை இல்லை என்றும் மம்தா பானர்ஜி கூறியிருக்கிறார். ஏற்கனவே 1 லட்சம் தொழிலாளர்கள் மேற்கு வங்காளத்துக்கு திரும்பிவிட்டதாகவும், மேலும் ஏராளமானோர் நூற்றுக்கும் மேற்பட்ட ரெயில்கள் மூலம் அழைத்து வரப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்து உள்ளார்.

ஹூக்ளி மாவட்டத்தில் கடந்த வாரம் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் பற்றி மம்தா பானர்ஜி குறிப்பிடுகையில், பாரதீய ஜனதா தலைவர்கள் வன்முறையை தூண்டி விடுவதாகவும், குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறி இருக்கிறார்.

Next Story