நாடு கடத்தப்படும் வழக்கு: விஜய் மல்லையாவுக்கு கடும் பின்னடைவு


நாடு கடத்தப்படும் வழக்கு:  விஜய் மல்லையாவுக்கு கடும் பின்னடைவு
x
தினத்தந்தி 14 May 2020 11:59 AM GMT (Updated: 14 May 2020 11:59 AM GMT)

தன்னை நாடு கடத்தும் லண்டன் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய விஜய் மல்லையாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது

புதுடெல்லி,

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவன அதிபர் விஜய் மல்லையா மீது ரூ.9,000 கோடி வங்கி மோசடி செய்ததாக சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் வழக்குப் பதிவு செய்தன. இதற்கிடையே, வழக்கு விசாரணைகளிலிருந்து தப்பிப்பதற்காக  விஜய் மல்லையா இங்கிலாந்துக்கு தப்பி ஓடினார். 

இங்கிலாந்தில் தஞ்சம் அடைந்துள்ள விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று இந்தியா சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. லண்டன் கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. இதைத்தொடர்ந்து அவரை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்ப மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு உத்தரவிட்டது. இந்த வழக்கில் விஜய் மல்லையா ஜாமீன் பெற்றதுடன், இந்த உத்தரவை எதிர்த்து லண்டன் ஐகோர்ட்டிலும் மேல் முறையீடு செய்தார்.  இந்த வழக்கில் தீர்ப்பளித்த  இங்கிலாந்து உயர் நீதிமன்றம், விஜய் மல்லையாவின் மேல் முறையீட்டு மனுவை நிராகரித்தது. விஜய் மல்லையாவுக்கு எதிரான வழக்கில் முகாந்திரம் இருப்பதாகவும் நீதிமன்றம் தெரிவித்து இருந்தது. 

இந்த நிலையில்,  நாடு கடத்த உத்தரவிட்டதை  எதிர்த்து இங்கிலாந்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய விஜய் மல்லையாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த வழக்கில் விஜய் மல்லையாவுக்கு இருந்த சட்ட ரீதியான அனைத்து வாய்ப்புகளும் முடிந்துள்ளன. 

இந்தியா - இங்கிலாந்து நாடு கடத்துதல் ஒப்பந்தத்தின் படி, இங்கிலாந்து உள்துறை மந்திரி பிரிதி படேல்  நீதிமன்றத்தின் உத்தரவை முறைப்படி உறுதி செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், விஜய் மல்லையா 28 நாட்களுக்குள் நாடு கடத்தப்பட வாய்ப்பு உள்ளது. 

Next Story