மத்திய அரசின் 2-வது கட்ட சலுகைகள் - விவசாயிகளுக்கு ரூ.2 லட்சம் கோடி கடன்; வீட்டுக்கடனுக்கு மானியம் நீட்டிப்பு


மத்திய அரசின் 2-வது கட்ட சலுகைகள் - விவசாயிகளுக்கு ரூ.2 லட்சம் கோடி கடன்; வீட்டுக்கடனுக்கு மானியம் நீட்டிப்பு
x
தினத்தந்தி 15 May 2020 5:45 AM IST (Updated: 15 May 2020 3:24 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா நோய் பரவலால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளில் இருந்து இந்தியாவை மீட்கும் வகையில் ரூ.20 லட்சம் கோடியில் சிறப்பு திட்டம் அமல்படுத்தப்படும் என்று கடந்த 12-ந் தேதி பிரதமர் மோடி அறிவித்தார்.

புதுடெல்லி,

சலுகை திட்டங்கள்

அவர் கூறியபடி, மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று முன்தினம் முதல் அந்த திட்டம் பற்றிய தகவல்களை வெளியிட்டு வருகிறார். சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் கட்டுமான துறைக்கான சலுகை உள்ளிட்ட திட்டங்களை நேற்று முன்தினம் அவர் அறிவித்தார்.

இந்தநிலையில் 2-வது கட்டமாக வெளிமாநில தொழிலாளர்கள், சிறு விவசாயிகள், சிறு வியாபாரிகள், சாலையோர வியாபாரிகளுக்கான சலுகை திட்டங்களை நேற்று அவர் அறிவித்தார். இனி வரும் நாட்களில் விவசாயிகள் உள்ளிட்டோருக்கு மேலும் பல திட்டங்கள் அறிவிக்கப்படும் என்றும் அப்போது அவர் கூறினார்.

நிர்மலா சீதாராமன் நேற்று வெளியிட்ட முக்கிய சலுகை திட்டங்கள் பற்றிய விவரம் வருமாறு:-

விவசாயிகளுக்கு ரூ.2 லட்சம் கோடி கடன்

* 3 கோடி சிறு விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் 4.22 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டு உள்ளது. விவசாயிகள் சிரமப்படாமல் இருக்க கடனை திருப்பி செலுத்துவதற்கான காலஅவகாசம் கடந்த மார்ச் 1-ந் தேதியில் இருந்து வருகிற 31-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. உரிய நேரத்தில் திருப்பி செலுத்துவோருக்கு வட்டி தள்ளுபடி செய்யப்படும்.

* விவசாயிகள் கடன் அட்டை மூலம் 2 கோடியே 50 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.2 லட்சம் கோடி கடன் வழங்கப்படும்.

* 25 லட்சம் புதிய ‘விவசாயிகள் கடன் அட்டை’கள் மூலம் ரூ.25 ஆயிரம் கோடி கடன் வழங்கப்பட்டு இருக்கிறது

* மீனவர்கள், கால்நடை வளர்ப்பில் ஈடுபடும் விவசாயிகளும் இந்த திட்டத்தின் கீழ் கொண்டு வரப்படுவார்கள்.

* கடந்த மார்ச் 1-ந் தேதி முதல் ஏப்ரல் 30-ந் தேதி வரை ரூ.86 ஆயிரத்து 600 கோடி வேளாண் கடன் வழங்கப்பட்டு இருக்கிறது.

ஊரக உள்கட்டமைப்பு

* நபார்டு வங்கியின் மூலம் கூட்டுறவு வங்கிகள் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகளுக்கு கடந்த மார்ச் மாதம் வரை ரூ.29 ஆயிரத்து 500 கோடி கடன் வழங்கப்பட்டு உள்ளது.

* பயிர்க்கடன் வழங்குவதற்காக கூட்டுறவு வங்கிகள் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகளுக்கு நபார்டு வங்கி கூடுதலாக ரூ.30 ஆயிரம் கோடி கடன் வழங்கும். இதன்மூலம் 3 கோடி விவசாயிகள் பயன் பெறுவார்கள்.

* ஊரக உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக மாநிலங்களுக்கு ரூ.4,200 கோடி வழங்கப்பட்டு இருக்கிறது.

* வேளாண் உற்பத்தி திட்டங்களுக்காக மார்ச் மாதம் முதல் மாநில அரசு நிறுவனங்களுக்கு ரூ.6,700 கோடி வழங்கப்பட்டு உள்ளது.

* வனம் மற்றும் வனம் சார்ந்த பகுதிகளில் வேலைவாய்ப்பை உருவாக்க ரூ.6 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் பழங்குடியின மக்கள் வேலைவாய்ப்பை பெறுவார்கள் என்பதால் அவர்களுடைய பொருளாதார நிலை உயரும்.

ஒரே நாடு- ஒரே ரேஷன் கார்டு

* எந்த மாநிலத்திலும் எந்த ரேஷன் கடையிலும் பொருட் கள் வாங்க வகை செய்யும் ‘ஒரே நாடு-ஒரே ரேஷன் கார்டு திட்டம்’ அமல்படுத்தப்படுகிறது. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் இந்த திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படும்.

* வெளிமாநில தொழிலாளர்களுக்கு ஒருவருக்கும் தலா 5 கிலோ அரிசி அல்லது கோதுமை மற்றும் ஒரு குடும்பத்துக்கு 1 கிலோ சென்னா (கொண்ட கடலை) என அடுத்த 2 மாதங்களுக்கு வழங்கப்படும். இதன்மூலம் 8 கோடி புலம் பெயர்ந்த வெளிமாநில தொழிலாளர்கள் பயன் அடைவார்கள்.

* இதற்கான செலவு தொகை ரூ.3,500 கோடியை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளும். மாநில அரசுகள் வெளிமாநில தொழிலாளர்களை அடையாளம் கண்டு, வழிகாட்டு நெறிமுறைகளின்படி அவர்களுக்கு உணவு தானியம் வழங்கும் இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

வெளிமாநில தொழிலாளர்களுக்கு வீடு

* வெளிமாநில தொழிலாளர்களின் நலனுக்காக அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் வீடு கட்டும் திட்டம் செயல்படுத்தப்படும். இந்த திட்டத்தின்கீழ் கட்டப்படும் வீடுகள் வெளிமாநில தொழிலாளர்களுக்கு குறைந்த வாடகைக்கு விடப்படும்.

* குறைந்த வாடகையில் வீடுகள் கட்டி வழங்கும் நிறுவனங்கள், அமைப்புகளுக்கு மத்திய அரசின் சார்பில் மானியம் வழங்கப்படும்.

* வெளிமாநில தொழிலாளர்களை காண்டிராக்டர் மூலமாக வேலைக்கு அமர்த்துவதற்கு பதிலாக, வேலைகொடுப்பவரே நேடியாக வேலைக்கு எடுக்க வழிவகை செய்யப்பட்டு உள்ளது.

* வெளிமாநில தொழிலாளர்களுக்கு, மாநில பேரிடர் நிதியில் இருந்து தங்கும் இடம், உணவு மற்றும் குடிநீர் வசதி செய்து கொடுக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்து இருக்கிறது. மேலும் இதற்காக மாநிலங்களுக்கு ரூ.11,002 கோடி வழங்கப்பட்டு இருக்கிறது.

3 கோடி முக கவசங்கள்

* நகர்ப்புறங்களில் ஊரடங் கால் பாதிக்கப்பட்ட வீடு இல்லாதோருக்கு மார்ச் 28-ந் தேதி முதல் 3 வேளை தரமான உணவு வழங்கப்படுகிறது.

* தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச சம்பளத்தை நிர்ணயம் செய்ய தேசிய அளவில் குழு ஏற்படுத்தப்படும்.

* 10 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரியும் நிறுவனங்களுக்கு இ.எஸ்.ஐ. (தொழிலாளர் ஈட்டுறுதி திட்டம்) வசதி செய்யப்பட்டு உள்ளது. அனைத்து மாவட்டங்களுக்கும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும். 10-க்கும் குறைவான தொழிலா ளர்கள் கொண்ட நிறுவனங் கள் விருப்பப்பட்டால் இந்த திட்டத்தில் இணையலாம்.

* 12 ஆயிரம் சுயஉதவி குழுக்கள் மூலம் 3 கோடி முக கவசங்களும், 1 லட்சத்து 20 ஆயிரம் லிட்டர் கிருமிநாசினியும் தயாரித்து வழங்கப்பட்டு இருக்கிறது.

ஊரக வேலைவாய்ப்பு திட்டம்

* தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஊதியம் 182 ரூபாயில் இருந்து 202 ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடும் போது தற்போது இந்த திட்டத்தின் கீழ் 40 முதல் 50 சதவீதம் பேர் கூடுதலாக பதிவு செய்து உள்ளனர்.

* இந்த திட்டத்தின் கீழ் கடந்த 13-ந் தேதி வரை 14 கோடியே 62 லட்சம் மனித வேலை நாட்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. இதற்காக தற்போது வரை ரூ.10 ஆயிரம் கோடி செலவிடப்பட்டு இருக்கிறது.

* ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வெளிமாநில தொழிலாளர்களுக்கும் வேலை வழங்க மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

* மழைக்காலத்திலும் இந்த திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு வழங்கப்படும்.

சாலையோர வியாபாரிகள்

* பாகுபாடுகளை நீக்கும் வகையில் தேசிய அளவில் ஒரே மாதிரியான ஊதியம் வழங்கும் திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டு உள்ளது.

* அனைத்து வேலைகளிலும் பெண்கள் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டு இருப்பதோடு, இரவு பணியின் போது அவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதும் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

* கொரோனா பரவல் காரணமாக வாழ்வதாரம் பாதிக் கப்பட்டுள்ள சாலையோர வியாபாரிகளும் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பயனாளிகளாக சேர்க்கப்படுவார்கள். ரூ.10 ஆயிரம் தொடக்கநிலை மூலதனத்துடன் சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்கப்படும். அந்த வகையில் மொத்தம் ரூ.5 ஆயிரம் கோடி சிறப்பு கடனாக வாழங்கப்படும். இதன் மூலம் கிட்டத்தட்ட 50 லட்சம் பேர் பயன் அடைவார்கள்.

சிறு தொழில் நிறுவனங்களுக்கு கடன்

* அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு வழங்கப்படும். அவர்களுக்கு உரிய நேரத்தில் ஊதியத்தை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

* 5 ஆண்டுகளுக்கு பதில் ஒரு ஆண்டு வேலை செய்து இருந்தாலும் பணிக்கொடை கிடைக்க வகை செய்யப்பட்டு உள்ளது.

* சிறு தொழில் நிறுவனங்களுக்கு முத்ரா-சிசு திட்டத்தின் கீழ் ரூ.1.62 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டு உள்ளது. (இந்த திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக ரூ.50 ஆயிரம் கடன் பெற முடியும்) 12 மாதத்துக் குள் கடனை திருப்பி செலுத்துவோருக்கு 2 சதவீதம் மானியம் வழங்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் ரூ.1,500 கோடி வரை நிவாரணம் வழங்கப்படும்.

வீட்டுக்கடன் மானியம்

* வீட்டு வசதி திட்டங்களின் மேம்பாட்டுக்காக ரூ.70 ஆயிம் கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் வேலைவாய்ப்பு பெருகுவதோடு இரும்பு, சிமெண்டு உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் தேவையும் அதிகரிக்கும்.

* ரூ.6 லட்சம் முதல் ரூ.16 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ள நடுத்தர குடும்பத்தினருக்கான வீட்டுக்கடன் மானிய திட்டம் கடந்த மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்பட்டது. இதன்மூலம் 3 லட்சத்து 30 ஆயிரம் குடும்பங்கள் பயன் பெற்றன. இந்த மானிய திட்டத்தை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டு இருப்பதால் 2020-2021-ம் ஆண்டில் 2½ லட்சம் நடுத்தர வருவாய் குடும்பத்தினர் பயன் அடைவார்கள்.

மேற்கண்ட முக்கிய அறிவிப்புகளை நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.

Next Story