உத்தரபிரதேச மாநிலத்தில் லாரிகள் மோதி விபத்து; 25 தொழிலாளர்கள் பலி
லாரிகள் மோதிய விபத்தில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் 25 பேர் பரிதாபமாக பலியாகினர்.
லக்னோ,
ராஜஸ்தான் மாநிலத்தில் வேலை செய்து வந்த பீகார், ஜார்கண்ட் மற்றும் மேற்குவங்காள மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஊரடங்கால் சுமார் 50 நாட்களாக வேலை இழந்து வருமானம் இன்றி தவித்து வந்தனர். 3-ம் கட்ட ஊரடங்கு முடிய இருக்கும் நிலையில், 4-ம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருப்பதால், அவர்கள் சொந்த ஊருக்கு செல்வதென முடிவு செய்தனர்.
அதன்படி சுமார் 60-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒரு லாரியில் ஏறி தங்களது மாநிலங்களுக்கு புறப்பட்டனர். உத்தரபிரதேச மாநிலம் அவுரையா மாவட்டத்தில் உள்ள மிகாலி என்ற இடத்தில் நேற்று அதிகாலை 3.30 மணியளவில் சென்று கொண்டிருந்தபோது, அந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்று கொண்டிருந்த மற்றொரு லாரி மீது பயங்கரமாக மோதியது. இதனால் அந்த பகுதியில் இருந்த சாலையோர பள்ளத்தில் 2 லாரிகளும் உருண்டன.
இந்த விபத்தில் 25 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த 36 பேரில், 22 பேர் அவுரையாவில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 14 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்ததால் மேல்சிகிச்சைக்காக இட்டாவா மாவட்டத்தில் உள்ள மற்றொரு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
ஊரடங்கால் பிற மாநிலங்களில் சிக்கித் தவிக்கும் தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அழைத்துச் செல்ல சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் அதற்காக காத்திருக்க மனமில்லாமல், நடந்தும், பிற வாகனங்களில் ஏறியும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் மாநிலங்களுக்கு சென்று வருகின்றனர். அவ்வாறு செல்லும் வழியில் விபத்தில் சிக்கி தொழிலாளர்கள் பலியாகும் சோக சம்பவம் தொடர்ந்து வருகிறது. மராட்டிய மாநிலத்தில் நடந்து சென்ற தொழிலாளர்கள் 16 பேர் தண்டவாளத்தில் படுத்து தூங்கியபோது ரெயில் மோதி பரிதாபமாக உயிரிழந்தனர். 2 தினங்களுக்கு முன்பு மராட்டியத்தில் இருந்து உத்தரபிரதேசத்துக்கு லாரியில் வந்து கொண்டிந்த 8 தொழிலாளர்கள் மத்திய பிரதேசத்தில் நடந்த விபத்தில் பலியாகினர். இந்த விபத்தில் 55 பேர் காயம் அடைந்தனர். இந்த நிலையில் தற்போது அவுரையா மாவட்டத்தில் நடந்த விபத்தில் 25 பேர் பலியான சம்பவம் நாடு முழுவதையும் அதிர்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்த்தி உள்ளது.
உத்தரபிரதேசத்தில் நடந்த இந்த கோர விபத்தில் பலியானவர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி உள்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து குறித்து அறிந்த உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்ததுடன் பலியானவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவியும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் லாரியில் தொழிலாளர்கள் செல்வதை கவனித்து அவர்களை தடுத்து நிறுத்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத 2 போலீஸ் அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்தும் அவர் உத்தரவிட்டார்.
சமாஜ்வாடி கட்சித் தலைவரும் உத்தரபிரதேச மாநில முன்னாள் முதல்-மந்திரியுமான அகிலேஷ் யாதவ் விபத்தில் பலியானவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளார்.
Related Tags :
Next Story