புதுச்சேரியில் நாளை முதல் அனைத்து மதுக்கடைகளையும் திறக்க அனுமதி
புதுச்சேரியில் நாளை முதல் அனைத்து மதுக்கடைகளையும் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது.
புதுச்சேரி,
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் டாஸ்மாக் மதுக்கடைகளும் மூடப்பட்டன. இவற்றில் பல மாநிலங்களில் மீண்டும் மதுக்கடைகள் திறக்கப்பட்டு விற்பனை நடந்து வருகிறது.
கர்நாடகாவில் கடந்த 4ந்தேதி முதல் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. ஆண், பெண் பேதமின்றி அனைவரும் ஊரடங்கு விதிகளை கடைப்பிடித்து வரிசையில் நின்று மது வகைகளை வாங்கி சென்றனர்.
இதேபோன்று தமிழகத்திலும் நிபந்தனைகளுடன் மதுக்கடைகளை திறக்க கடந்த 6ந்தேதி சென்னை ஐகோர்ட்டு அனுமதி வழங்கியது. இதைத்தொடர்ந்து சென்னை நீங்கலாக மற்ற மாவட்டங்களில் 7ந்தேதி மதுக்கடைகள் திறக்கப்பட்டன.
எனினும், நிபந்தனைகள் மீறப்பட்டன என எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, தொடரப்பட்ட வழக்கு விசாரணையின் முடிவில், கடந்த 8ந்தேதி தமிழகத்தில் மீண்டும் மதுக்கடைகளை மூடுவதற்கு உத்தரவிடப்பட்டது.
இதன்பின்னர், தமிழக அரசின் மேல்முறையீட்டால், சென்னை ஐகோர்ட்டு மற்றும் மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்தது. இதன்பின்பு கடந்த 16ந்தேதி முதல் தமிழகத்தில் மீண்டும் மது விற்பனை நடந்து வருகிறது.
இந்நிலையில், புதுச்சேரியில் முதல் அமைச்சர் நாராயணசாமி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தின் இறுதியில், நாளை முதல் அனைத்து மதுக்கடைகளையும் திறக்க அனுமதி அளிப்பது என முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இதன்படி, காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை மதுக்கடைகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story