உலக இறப்பு விகிதத்துடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் கொரோனா இறப்பு விகிதம் மிகக்குறைவு-மத்திய அரசு தகவல்
உலக இறப்பு விகிதத்துடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் கொரோனா இறப்பு விகிதம் மிகக்குறைவு என்று மத்திய அரசு கூறியுள்ளது.
புதுடெல்லி,
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- உலக அளவில் கொரோனாவுக்கு சுமார் 3 லட்சத்து 21 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். இது, ஒரு லட்சம் மக்கள்தொகையில் 4.1 என்ற விகிதம் ஆகும். ஆனால், இந்தியாவில் 3 ஆயிரத்து 163 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இது, ஒரு லட்சம் மக்கள்தொகைக்கு வெறும் 0.2 என்ற விகிதம் ஆகும். எனவே, இந்தியாவில் இறப்பு விகிதம் மிகக்குறைவு.
மற்ற நாடுகளை எடுத்துக்கொண்டால், அமெரிக்காவில், ஒரு லட்சம் மக்கள்தொகைக்கு 26.6 மரணங்களும், இங்கிலாந்தில் 52.1 மரணங்களும், இத்தாலியில் 52.8 மரணங்களும், ஸ்பெயினில் 59.2 மரணங்களும், பிரான்ஸ் நாட்டில் 41.9 மரணங்களும் நடந்துள்ளன. ஜெர்மனியில் 9.6, சீனாவில் 0.3, ஈரானில் 8.5, கனடாவில் 15.4, நெதர்லாந்தில் 3.3, மெக்சிகோவில் 4 என்ற விகிதங்களில் மரணங்கள் நடந்துள்ளன. இவற்றை விட இந்தியாவில் குறைவுதான். உரிய நேரத்தில் பாதிப்பை கண்டறிந்து சிகிச்சை அளிப்பதுதான் இதற்கு காரணம்.
கடந்த ஜனவரி மாதம் ஒரு ஆய்வுக்கூடம் மட்டுமே இருந்த நிலையில், தற்போது 500-க்கும் மேற்பட்ட ஆய்வுக்கூடங்கள் செயல்பட்டு வருகின்றன.கடந்த 18-ந் தேதி, ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 233 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை 24 லட்சத்து 25 ஆயிரத்து 742 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story