பிரதமர் மக்கள் சுகாதார திட்டத்தின் கீழ் 1 கோடி பேருக்கு இலவச சிகிச்சை: மோடி பெருமிதம்
பிரதமர் மக்கள் சுகாதார திட்டத்தின் கீழ் 1 கோடி பேருக்கு மேல் இலவச மருத்துவ சிகிச்சை பெற்று இருப்பதாக மோடி பெருமிதம் தெரிவித்து உள்ளார்.
புதுடெல்லி,
பிரதமர் மக்கள் சுகாதார திட்டத்தின் கீழ் 1 கோடி பேருக்கு மேல் இலவச மருத்துவ சிகிச்சை பெற்று இருப்பதாக மோடி பெருமிதம் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-
பிரதமர் சுகாதார திட்டம் (பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா-ஆயுஷ்மான் பாரத் திட்டம்) கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டது. உலகிலேயே அரசாங்கம் செயல்படுத்தும் திட்டங்களில் இதுதான் மிகப்பெரிய திட்டம் ஆகும். இந்த திட்டத்தின் கீழ் பலன் பெற்றோரின் எண்ணிக்கை 1 கோடியை தாண்டிவிட்டது என்பது ஒவ்வொரு இந்தியரும் பெருமைப்படத்தக்க விஷயம் ஆகும்.
2 ஆண்டுகளில் இந்த திட்டம் பலருடைய வாழ்க்கையில் ஆக்கப்பூர்வமான மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த திட்டத்தின் பயனாளிகள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர் அனைவரும் பூரண உடல்நலத்துடன் வாழ வாழ்த்துகிறேன். இந்த திட்டத்தில் தொடர்புடைய மருத்துவர்கள், நர்சுகள், சுகாதார பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரையும் பாராட்டுகிறேன்.
இந்த திட்டம் ஏராளமான இந்தியர்களின், குறிப்பாக ஏழைகள் மற்றும் அடிமட்டத்தில் உள்ள மக்களின் நம்பிக்கையை பெற்று இருக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் பயனாளிகள் உயர்தர மருத்துவ வசதிகளை பெற முடியும்.
அலுவலக பணி நிமித்தமாக நான் வெளியூர் செல்லும் போது இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற்றவர்களுடன் பேசமுடியும். ஆனால் தற்போதைய சூழ்நிலையில் அது முடியாது. பிரதமர் சுகாதார திட்டத்தின் பலன் பெற்ற ஒரு கோடியாவது நபரான மேகாலயா மாநிலத்தைச் சேர்ந்த பூஜா தாபா என்பவருடன் நான் தொலைபேசி மூலம் கலந்துரையாடினேன். ஒரு ராணுவ வீரரின் மனைவியான அவர், பிரதமர் சுகாதார திட்டத்தின் கீழ் ஷில்லாங் நகரில் உள்ள ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை செய்து கொண்டது பற்றி அப்போது விளக்கி கூறினார்.
மணிப்பூரில் பணியில் இருக்கும் தனது கணவர் கொரோனா ஊரடங்கு காரணமாக வர இயலவில்லை என்றும், தனது இரு குழந்தைகளையும் பக்கத்து வீட்டுக்காரர்கள் பார்த்துக்கொண்டதாகவும், அறுவை சிகிச்சைக்கோ, மருந்துகளுக்கோ தான் பணம் எதுவும் செலுத்தவில்லை என்றும் பூஜா தாபா தெரிவித்தார். இந்த திட்ட பயனாளி அட்டை இல்லை என்றால், அறுவை சிகிச்சைக்காக தான் மிகவும் சிரமப்பட நேர்த்து இருக்கும் என்றும் அவர் கூறினார்.
இவ்வாறு பிரதமர் மோடி தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்து உள்ளார்.
பூஜா தாபாவுடன் பேசிய ஆடியோ உரையாடலையும் பிரதமர் மோடி பகிர்ந்து இருக்கிறார்.
பிரதமரின் சுகாதார காப்பீட்டு திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து நாடு முழுவதும் 1 கோடிக்கும் அதிகமான பயனாளிகள் ரூ.13 ஆயிரத்து 412 கோடி மதிப்பிலான மருத்துவ சிகிச்சையை இலவசமாக பெற்று இருப்பதாகவும், கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள தற்போதைய காலகட்டத்தில் 2,132 நோயாளிகள் இந்த திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இந்த திட்டத்தில நாடு முழுவதும் தனியார் மருத்துவமனைகள் உள்பட 21 ஆயிரத்து 565 ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், குஜராத், தமிழ்நாடு, சத்தீஷ்கார், கேரளா, ராஜஸ்தான் மாநிலங்களில் அதிகம் பேர் சிகிச்சை பெற்று இருப்பதாகவும் தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்து உள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் 53 கோடி பயனாளிகளுக்கு இலவச கொரோனா பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிப்பதற்கான முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு இருப்பதாக மத்திய சுகாதார மந்திரி ஹர்ஷ வர்த்தன் அறிக்கை ஒன்றில் தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story