மேற்கு வங்காளத்தில் புயல் கரையை கடந்தது: பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை; மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன


மேற்கு வங்காளத்தில் புயல் கரையை கடந்தது: பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை; மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன
x
தினத்தந்தி 20 May 2020 11:30 PM GMT (Updated: 20 May 2020 10:59 PM GMT)

மேற்கு வங்காளத்தில் பலத்த சூறாவளி காற்று, மழையுடன் உம்பன் புயல் கரையை கடந்தது. புயலுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் ஏராளமான மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன.

கொல்கத்தா, 

வங்க கடலின் தென்பகுதியில் சமீபத்தில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து புயலாக மாறியது. அந்த புயலுக்கு ‘உம்பன்’ என பெயர் சூட்டப்பட்டது.

இந்த புயல் மேலும் வலுவடைந்து சூப்பர் புயலாக மாறி வடக்கு திசையில் மேற்கு வங்காளத்தை நோக்கி நகர்ந்தது. இதன் காரணமாக மேற்கு வங்காளம், ஒடிசா மாநிலங்களையொட்டிய கடல் பகுதி கொந்தளிப்புடன் காணப்பட்டது.

‘உம்பன்’ புயல் மேற்கு வங்காளத்தில் உள்ள டிகாவுக்கும், வங்காளதேசத்தின் ஹாடியா தீவுக்கும் இடையே நேற்று பிற்பகலில் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இதனால் மேற்கு வங்காளத்திலும், ஒடிசாவிலும் கடலோர மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இரு மாநிலங்களிலும் கடலோர பகுதிகளிலும், தாழ்வான இடங்களிலும் வசிக்கும் மக்கள் சுமார் 6 லட்சத்து 58 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.

அந்த வகையில் மேற்கு வங்காளத்தில் 5 லட்சம் பேரும், ஒடிசாவில் சுமார் 1 லட்சத்து 58 ஆயிரம் பேரும் அப்புறப்படுத்தப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

எதிர்பார்க்கப்பட்டது போலவே ‘உம்பன்’ புயல் நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு டிகாவுக்கும் ஹாடியா தீவுக்கும் இடையே சுந்தரவன காடுகள் பகுதியில் கரையை கடக்க தொடங்கியது.

அப்போது மணிக்கு 160 முதல் 190 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசியது. பலத்த மழையும் கொட்டியது. புயலின் கண் பகுதி 40 கி.மீ. சுற்றளவுக்கு இருந்தது. புயலின் பின் பகுதி 120 கி.மீ. நீளத்துக்கு இருந்தது.

கரையை கடக்க தொடங்கிய புயல் கொல்கத்தாவின் கிழக்கு பகுதி வழியாக நகர்ந்து தெற்கு, வடக்கு 24 பர்கானா மாவட்டங்கள் வழியாக வடக்கு மற்றும் வடகிழக்கு திசையை நோக்கி சென்றது. இதனால் மேற்கு வங்காளத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பலத்த மழை கொட்டியது. புயல் கரையை கடக்க சுமார் 5 மணி நேரம் ஆனது.

புயல் கரையை கடந்த போது சுழன்றடித்த காற்றின் வேகத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் மேற்கு வங்காளத்திலும், ஒடிசாவின் கடலோர மாவட்டங்களிலும் ஏராளமான மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்தன. சில இடங்களில் வீடுகளின் கூரைகள் தூக்கி வீசப்பட்டன.

மேற்கு வங்காளத்தின் ஹவுரா மாவட்டத்தில் மரம் சாய்ந்து விழுந்ததில் ஒரு பெண் பலி ஆனார். இதேபோல் வடக்கு 24 பர்கானா மாவட்டத்தில் மரம் சாய்ந்ததில் ஒரு பெண் உடல் நசுங்கி செத்தார்.

ஒடிசாவில் புரி, கட்டாக், ஜாஜ்பூர், கேந்திரபாரா, கஞ்சம், பாலாசூர், குர்தா மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியதால் எங்கும் வெள்ளக்காடாக காட்சி அளித்தது.

புயலின் காரணமாக கனமழை பெய்த போது ஒடிசாவில் 67 வயது பெண் ஒருவரும், 3 மாத கைக்குழந்தையும் இறந்தனர்.

மேற்கு வங்காளத்திலும், ஒடிசாவில் ஏற்கனவே தேசிய பேரிடர் மீட்பு படையினர், மாநில பேரிடர் மீட்பு படையினர் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தனர். அவர்கள் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். சாய்ந்து கிடந்த மரங்களையும், மின்கம்பங்களையும் அப்புறப்படுத்தினார்கள்.

மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடி, புயல் நிலவரத்தை கண்காணித்து அதிகாரிகளுக்கு உரிய உத்தரவுகளை பிறப்பித்தார்.

அசாம், மேகாலயா மாநிலங்களிலும் பலத்த மழை பெய்தது.

‘உம்பன்’ புயல் காரணமாக வங்காளதேசத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. அங்கும் சேதம் ஏற்பட்டு உள்ளது.


Next Story