புயல் பாதித்த பகுதிகளை வான்வழியே நாளை பார்வையிடுகிறார் பிரதமர் மோடி


புயல் பாதித்த பகுதிகளை வான்வழியே நாளை பார்வையிடுகிறார் பிரதமர் மோடி
x
தினத்தந்தி 21 May 2020 9:59 PM IST (Updated: 21 May 2020 9:59 PM IST)
t-max-icont-min-icon

புயல் பாதித்த மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசாவின் பகுதிகளை வான்வழியே நாளை பிரதமர் மோடி பார்வையிடுகிறார்.

புதுடெல்லி,

தெற்கு வங்க கடலில் உருவான ஆம்பன் புயல் மேற்கு வங்காளத்தின் திகா கடற்கரை மற்றும் வங்காளதேசத்தின் ஹட்டியா தீவுகளுக்கு இடையே சுந்தரவன காடுகள் பகுதியையொட்டி நேற்று மதியம் 2.30 மணியளவில் கரையை கடந்தது.

புயல் கரையை கடந்தபோது மணிக்கு 160 முதல் 190 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசியது. பலத்த மழையும் கொட்டியது.  இதனால் மேற்கு வங்காளத்திலும், ஒடிசாவிலும் கடலோர மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆம்பன் புயலால் மேற்கு வங்காளத்தின் வடக்கு 24 பர்கானாசில் 5,500 வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டது.  கொல்கத்தாவில், நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கொண்டன.  கதவுகள், ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தன.  ஆம்பன் புயல் கரையை கடந்த போது சுழன்றடித்த காற்றின் வேகத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் மேற்கு வங்காளத்திலும், ஒடிசாவின் கடலோர மாவட்டங்களிலும் ஏராளமான மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்தன. சில இடங்களில் வீடுகளின் கூரைகள் தூக்கி வீசப்பட்டன.

இதேபோன்று ஒடிசாவின் பல்வேறு கடலோர மாவட்டங்களில் மின்சாரம் மற்றும் தொலைதொடர்பு உட்கட்டமைப்புகளில் பாதிப்பு ஏற்படுத்தி உள்ளது.  பிரதமர் மோடி டுவிட்டரில் இன்று வெளியிட்ட செய்தியில், இந்த சவாலான நேரத்தில், மேற்கு வங்காளத்துடன் ஒட்டுமொத்த நாடும் துணை நிற்கிறது.

மேற்கு வங்காள மக்களின் நலனுக்காக நான் வேண்டி கொள்கிறேன்.  இயல்பு நிலை திரும்புவதனை உறுதி செய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.  புயல் பாதித்த மக்களுக்கு உதவுவதில் சாத்தியப்பட்ட அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

புயல் பாதித்த பகுதிகளை வான்வழியே நாளை பிரதமர் மோடி பார்வையிடுகிறார்.  இதற்காக மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசாவுக்கு அவர் செல்கிறார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்து உள்ளது.  இந்நிலையில், புயல் வலுவிழந்து வங்காளதேசம் நோக்கி சென்றுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

Next Story