மே.வங்க மாநிலத்திற்கு முதல்கட்டமாக ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி : பிரதமர் மோடி
மேற்கு வங்காளத்துக்கு முதல் கட்டமாக ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
கொல்கத்தா,
மேற்கு வங்காள மாநிலத்தை புயல் தாக்கியதில் பலத்த சேதம் ஏற்பட்டு உள்ளது. 72 பேர் பலியாகி உள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவிக்கிறார்கள். பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. பாலங்கள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு உள்ளன. இதேபோல் ஒடிசாவின் கடலோர மாவட்டங்களிலும் புயல் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அம்பன் சூப்பர் புயலின் பாதிப்புகளைப் பார்வையிடுவதற்காக பிரதமர் மோடி இன்று காலை கொல்கத்தா சென்றடைந்தார். கொல்கத்தா விமான நிலையத்தில் வந்திறங்கிய பிரதமர் மோடியை முதல்வர் மம்தா பானர்ஜி வரவேற்றார். அதன்பின் அவருடன் சேர்ந்து, அம்பன் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டர் மூலமாக பிரதமர் மோடி பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, ” அம்பன் புயலால் மேற்கு வங்காளம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்காள அரசுக்கு முதல்கட்டமாக ரூ.1000 கோடி நிதியுதவி அளிக்கப்படும். புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதி அளிக்கப்படும். அம்பன் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய மாநில அரசுகள் உறுதுணையாக இருக்கும்” என்றார்.
Related Tags :
Next Story