தேசிய செய்திகள்

கொரோனாவை எதிர்கொள்ள இயலாமல் மத்திய அரசு திணறல் - எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் சோனியா காந்தி பேச்சு + "||" + Central government's inability to face corona - Sonia Gandhi talks at Opposition leaders meeting

கொரோனாவை எதிர்கொள்ள இயலாமல் மத்திய அரசு திணறல் - எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் சோனியா காந்தி பேச்சு

கொரோனாவை எதிர்கொள்ள இயலாமல் மத்திய அரசு திணறல் - எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் சோனியா காந்தி பேச்சு
கொரோனாவை எதிர்கொள்ள இயலாமல் மத்திய அரசு திணறி வருவதாகவும், தடுப்பூசி கண்டுபிடிக்கும்வரை கொரோனா இருக்கும் என்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் சோனியா காந்தி பேசினார்.
புதுடெல்லி, 

கொரோனா பின்னணியில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. காணொலி காட்சி மூலம் நடந்த இக்கூட்டத்துக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமை தாங்கினார்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள் உள்பட 22 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் சோனியா காந்தி பேசியதாவது:-

கொரோனாவுக்கு எதிரான போர், 21 நாட்களில் முடிந்து விடும் என்று ஆரம்பத்தில் பிரதமர் மோடி நம்பிக்கையுடன் இருந்தார். ஆனால் அது தவறாகிப் போய்விட்டது. தடுப்பூசி கண்டுபிடிக்கும்வரை கொரோனா இருக்கும் என்றே தோன்றுகிறது.

கொரோனாவை எதிர்கொள்ள தயார்நிலையில் இல்லாத மத்திய அரசு, இப்போது திணறுகிறது. ஊரடங்கு விதிமுறைகளை வகுப்பதில் மத்திய அரசிடம் தெளிவில்லை. ஊரடங்கில் இருந்து வெளியேறுவதற்கான வியூகமும் இல்லை. பரிசோதனை வழிமுறைகள், கருவிகள் இறக்குமதி ஆகியவற்றிலும் தடுமாறுகிறது. அதே நேரத்தில், கொரோனா பாதிப்பு அதிகரித்தபடி உள்ளது.

கொரோனா தாக்குதலின் அடையாளமாக, லட்சக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், உணவு, பணம், மருந்து ஆகியவை இல்லாமல் சாலைகளில் நடந்து சென்று கொண்டிருக்கிறார்கள். அவர்களை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை.

நிலமற்ற வேளாண் தொழிலாளர்கள், கடைக்காரர்கள், சுயதொழில் செய்பவர்கள், ஆட்குறைப்பு செய்யப்பட்ட தொழிலாளர்கள் என 13 கோடி பேரின் நிலைமையையும் மத்திய அரசு புறக்கணிக்கிறது.

புகழ்பெற்ற பொருளாதார நிபுணர்கள் பலர், உடனடியாக ஊக்கச்சலுகை அறிவிக்குமாறு கேட்டுக்கொண்டனர். அதன்படி, பிரதமர் மோடி அறிவித்த ரூ.20 லட்சம் கோடி சிறப்பு திட்டங்களும், அதுதொடர்பான மத்திய நிதி மந்திரியின் அறிவிப்புகளும் இந்த நாட்டின் மீதான குரூர நகைச்சுவையாக மாறிவிட்டன.

மக்களின் வங்கிக்கணக்கில் நேரடியாக பணம் செலுத்துமாறும், இலவச உணவு தானியங்களை அனைத்து குடும்பங்களுக்கும் வழங்குமாறும் நாங்கள் வலியுறுத்தினோம். புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல பஸ், ரெயில்களை ஏற்பாடு செய்யுமாறு கூறினோம். ஆனால் எல்லாம் செவிடன் காதில் சங்கு ஊதியதுபோல் ஆகிவிட்டது.

மக்களுக்கு உதவி செய்வதை விட்டுவிட்டு, சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பொதுத்துறை நிறுவனங்களை விற்க முயற்சிக்கிறது. இதுபற்றி யாரிடமும் ஆலோசனையோ, நாடாளுமன்றத்தில் விவாதமோ நடத்தவில்லை. இந்த தன்னிச்சையான முடிவை நாங்கள் கண்டிக்கிறோம்.

பெரும்பாலான பொருளாதார வல்லுனர்கள், நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி, எதிர்மறையாக, அதாவது மைனஸ் 5 சதவீதமாக இருக்கும் என்று கணித்துள்ளனர். எனவே, இதன் விளைவுகள் பேரழிவாக இருக்கும்.

இந்த அரசிடம் எந்த தீர்வும் இல்லை என்பது கவலை அளித்தாலும், ஏழைகள் மீது இரக்கம் காட்டாதது இதயத்தை நொறுக்குவதாக இருக்கிறது. இவ்வாறு சோனியா காந்தி பேசினார்.

22 கட்சி தலைவர்கள் பங்கேற்ற இக்கூட்டத்தில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ஏற்கனவே கொரோனாவை சந்திக்கும் நிலையில், மேற்கு வங்காளம், ஒடிசா ஆகிய மாநிலங்களுக்கு ‘உம்பன்’ புயல், இரட்டை பேரிடியாக அமைந்துள்ளது. அந்த புயலை தேசிய பேரழிவாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும்.

மீட்பு, நிவாரண பணிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். 2 மாநிலங்களுக்கும் தேவையான உதவிகளை அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.