வெளிநாடு வாழ் இந்தியர் அட்டைதாரர்கள் இந்தியா வர அனுமதி - மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு


வெளிநாடு வாழ் இந்தியர் அட்டைதாரர்கள் இந்தியா வர அனுமதி - மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு
x
தினத்தந்தி 22 May 2020 11:13 PM GMT (Updated: 22 May 2020 11:13 PM GMT)

ஓ.சி.ஐ. என்னும் வெளிநாடுவாழ் இந்தியர் அட்டைதாரர்கள் இந்தியா வர அனுமதி அளித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி, 

அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா போன்ற வெளிநாடுகளில் கொரோனா வைரஸ் ஊரடங்கால் வேலை இழந்த இந்தியர்கள் நாடு திரும்புவதில் சிக்கல் எழுந்துள்ளது. அவர்களை மீட்பதற்கு ‘வந்தே பாரத்’ என்ற திட்டத்தை தீட்டி, விமானங்களை அனுப்பி மத்திய அரசு மீட்டு வருகிறது.

ஆனால் கடந்த மார்ச் 25-ந் தேதி, கொரோனா வைரஸ் பரவலால் வெளிநாடு வாழ் இந்தியர் அட்டைதாரர்கள் உள்ளிட்ட அனைத்து விசாதாரர்களும் இந்தியாவுக்குள் நுழைவதற்கு மத்திய அரசு தடை விதித்தது. இதன்காரணமாக வெளிநாடுகளில் சிக்கித்தவிக்கிற வெளிநாடுவாழ் இந்தியர் அட்டைதாரர்கள் நாடு திரும்ப முடியாமல் தடை ஏற்பட்டுள்ளது. இந்த விதியை தளர்த்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.

இந்தநிலையில் இவ்விதியில் தளர்வுகளை அறிவித்து மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று அறிவிப்பு வெளியிட்டது. அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு பிறந்து வெளிநாடுவாழ் இந்தியர் அட்டை வைத்திருக்கும் அனைத்து சிறு குழந்தைகளும் இந்தியா வரலாம்.

* குடும்ப உறுப்பினர் மரணம் போன்ற அவசர நிலைகளின் காரணமாக வெளிநாடுவாழ் இந்தியர் அட்டை வைத்திருப்போர் இந்தியா வர அனுமதிக்கப்படுகிறது.

* கணவன்-மனைவி இருவரில் ஒருவர் இந்தியராகவும், மற்றவர் வெளிநாடுவாழ் இந்தியர் அட்டைதாரராகவும் இருந்து, அவர்களின் நிரந்தர வசிப்பிடம் இந்தியாவில் இருக்கிறது என்றால் அவர்கள் இந்தியா வர அனுமதி உண்டு.

* பல்கலைக்கழக மாணவர்கள் வெளிநாடுவாழ் இந்தியர் அட்டைதாரர்களாக இருந்து, அவர்களது பெற்றோர் இந்தியாவில் இந்திய குடிமக்களாக வசித்து வந்தால், அவர்களும் இந்தியா வர அனுமதிக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story