மேற்கு வங்காளத்தில் புயல் பாதித்த பகுதிகளில் நிவாரண பணிகள் தீவிரம்


மேற்கு வங்காளத்தில் புயல் பாதித்த பகுதிகளில் நிவாரண பணிகள் தீவிரம்
x
தினத்தந்தி 23 May 2020 9:50 PM GMT (Updated: 23 May 2020 9:50 PM GMT)

மேற்கு வங்காளத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

கொல்கத்தா, 

வங்க கடலில் உருவான ‘உம்பன்’ புயல் கடந்த புதன்கிழமை மேற்கு வங்காள மாநிலத்தை தாக்கியது. இதனால் அங்கு பலத்த சேதம் ஏற்பட்டது. பல்லாயிரக்கணக்கான மரங்கள், மின்கம்பங்கள் மற்றும் செல்போன் கோபுரங்கள் சாய்ந்தன. பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. 12 மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளன.

மரங்கள் சாய்ந்து விழுந்ததிலும், மின்சாரம் சாய்ந்ததிலும், சுவர் இடிந்து விழுந்ததிலும் பலர் உயிர் இழந்தனர். ஏராளமான மக்கள் வீடுவாசல்களை இழந்து தவிக்கிறார்கள்.பிரதமர் மோடி நேற்றுமுன்தினம் மேற்கு வங்காளத்துக்கு சென்று புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். அந்த மாநிலத்துக்கு உடனடி நிவாரணமாக மத்திய அரசு ரூ.1,000 கோடி வழங்கும் என்று அப்போது அவர் அறிவித்தார்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. வெள்ளத்தால் துண்டிக்கப்பட்ட சாலைகளை சீரமைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. கொல்கத்தா நகரிலும் வடக்கு மற்றும் தெற்கு 24 பர்கானா மாவட்டங்களிலும் சில பகுதிகளில் மின்சார சப்ளையும், செல்போன் இணைப்பும் சீரடைந்து உள்ளது.

கொல்கத்தா நகரில் நேற்று சில பகுதிகளில், மின்சாரம், குடிநீர் வழங்க கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.நகரில் சீரமைப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதாகவும், முழுஅளவில் இயல்பு நிலைக்கு திரும்ப ஒரு வாரம் ஆகும் என்றும் கொல்கத்தா மாநகராட்சி தலைவர் பிர்ஹத் ஹக்கீம் தெரிவித்தார்.

இதற்கிடையே புயல்-மழையால் பாதிக்கப்பட்டவர்களில் சிலர் மரணம் அடைந்ததை தொடர்ந்து சாவு எண்ணிக்கை 86 ஆக அதிகரித்தது.

இந்தநிலையில், புயல் நிவாரண பணிகள் நடைபெறுவதால் வெளிமாநிலங்களில் இருந்து மேற்கு வங்காளத்துக்கு தொழிலாளர்களை அனுப்புவதற்காக வருகிற 26-ந் தேதி வரை சிறப்பு ரெயில்களை இயக்க வேண்டாம் என்று ரெயில்வே அமைச்சகத்தை அந்த மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கேட்டுக்கொண்டு உள்ளார்.

இது தொடர்பாக அவரது சார்பில் அந்த மாநில தலைமை செயலாளர் ராஜீவ் சின்கா எழுதியுள்ள கடிதத்தில், மாவட்ட நிர்வாகங்கள் நிவாரண மற்றும் மறுசீரமைப்பு பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு இருப்பதால், சிறப்பு ரெயில்களில் வரும் தொழிலாளர்களை வரவேற்று உரிய இடங்களுக்கு அனுப்பி வைப்பது சிரமம் என்றும், எனவே சிறப்பு ரெயில்களை அனுப்ப வேண்டாம் என்றும் கூறி உள்ளார்.

Next Story